பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

ஒரு கோட்டுக்கு வெளியே ...



என்பதைக் காட்டுவதுபோல் தனியாக இருந்த சுடுகாட்டிற்குக் கொண்டு போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்.

பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் பக்கமாகப் போனவர்கள், திரும்பி நடந்து. குளத்தங்கரைப்பக்கம் இருந்த சேரி சுடுகாட்டுக்குப் போனார்கள். அவசர அவசரமாக, பூவரசு மரக்கட்டைகள் போடப்பட்டு, வறட்டிகள் அடுக்கப்பட்டன. மாயாண்டியை, அதில் வைத்து, அதற்கு மேலும் வறட்டிகளை வைத்தார்கள். மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. "யாராவது ஆம்புள கொள்ளி போடாட்டா நல்லதுல்ல" என்று ஒருவர் சொன்னார். உடனே, மேளக்காரரான அருணாசலத்தின் தந்தை "ஒன்ன சின்னப் பிள்ளையில ஜாதி வித்தியாசமில்லாம பெத்த மவன மாதிரி மடிலவைச்சிக் கொஞ்சுன மவராசன் இவரு. நீ கொள்ளி வைடா!" என்று அருணாசலத்திடம் சொன்னார். அவன் உடனே குத்துக்கால் போட்டு, உட்கார்ந்தான். அவனுக்குத் தலைமுடி இறக்கப்பட்டது.

உலகம்மை எடுத்துக்கொடுத்த நெருப்பை வாங்கிக் கொண்டு, அருணாசலம் சடலத்திற்குத் தீ வைக்கப்போனான். அழுது தீர்ந்தவள் போல் இருந்த உலகம்மையால், இப்போது உணர்வற்று இருக்க முடியவில்லை. அய்யாவின் பிணத்தோடு பிணமாகச் சேரப்போகிறவள்போல், முண்டியடித்துக் கொண்டு ஓடப்போனாள். சிலர், அவளைப் பிடித்துக்கொண்டார்கள், அவள் ஓலமிட்டாள்:

"என்னப் பெத்த அய்யா, எப்டிய்யா என்ன விட்டுட்டுப் போவ மனம் வந்தது? என்னையும் கூட்டிக்கிட்டுப் போவும், எப்பய்யா வருவீரு? ஓம்ம, சாவையில பக்கத்துல இருக்க முடியாத பாவியாயிட்டேனே. அய்யா. என்ன பெத்த அய்யா, நீரு சாவும்போது எப்டித் துடிச்சியரோ? எப்டி அழுதியரோ, எப்டிக் கலங்கினீரோ? இனிமே எப்பய்யா ஒம்மப் பாக்கது? என்னப் பெத்த அய்யா, பெத்து வளத்து. பேருட்ட அய்யாவே, நீரு செத்து மடியயிலே சண்டாளி இல்லியே."

உலகம்மையை யாரும் தடுக்கவில்லை. அவள் போக்கிலேயே அழ விட்டார்கள். நெருப்பு வைக்கப்போன அருணாசலம், நெருப்பை வைக்காமலே அங்கேயே அழுதுகொண்டு நின்றான், அவன் கையைத் தூக்கி, அதிலிருந்த நெருப்பை. ஒருவர் சிதையில் வைத்தார்.

நெருப்பு மாயாண்டியைத் தள்ளி வைக்காமல் உடனே பற்றிக்கொண்டது.