பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம்மை நடந்தாள்...

197


“ஒலகம்மா, நான் மூணாவது மனுஷன் சொல்றதக் கேளு. நம்ம ஜாதிகளயே நீ தல குனிய வைக்கதுமாதிரி நடக்கப் படாது. இனிமே ஒன்ன ஒருத்தரும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க!”

“நீரு எங்கய்யா கெஞ்சும்போது ஒண்ணுஞ்சொல்லாம இருந்தீரே, அதுமாதிரியா?”

ராமையாத்தேவருக்கு நம்பிக்கை போய்விட்டாலும், அய்யாவு நாடாருக்குப் போகவில்லை. முன்வந்து மொழிந்தார்:

“ஒலவு, நம்ம ஜாதியயே தலைகுனிய வச்சுட்டியே, பட்டி தொட்டி பதினெட்டு எடத்துலயும் குட்டாம்பட்டின்னா, ஒரு தனிமதிப்பு இருக்கு. நாங்கெல்லாம் தலைமிநிர்ந்து நடக்க முடியாம, குனிஞ்ச தல நிமிரமுடியாமப் பண்ணலாமா? நம்ம ஜாதில யாரும் இப்டி நடந்துக்கல! பெரியய்யா சொல்றதக் கேளு. நடந்தது நடந்துபோச்சி! நீ அபராதம் முழுசையும் கட்டாண்டாம். அடயாளமா நாலனாவுக்குக் கோவிலுக்கு எண்ணெய் வாங்கி ஊத்திடு. ஒண்ணாயிடலாம்.”

“ஒங்க புண்யத்துல எண்ணய அபராதமா குடுத்திட்டேன். அய்யாமேல எண்ணய ஊத்தி எரிச்சி அபராதம் கட்டியாச்சி. சரி, வழிய விடுங்க.”

கணக்கப்பிள்ளையால், பொறுக்க முடியவில்லை. அதுவும்

மாரிமுத்து நாடார் காதைக் கடித்ததும், அவருக்கு வாயில் நமைச்சல் ஏற்பட்டது.

“ஏ பொண்ணு, என்னோட அனுபவமும் ஒன்னோட வயசும் ஒண்ணு. நான் ஒனக்கு நல்லதுக்குத்தான் சொல்றேன். ஒனக்கு இங்க இருக்க இஷ்டமுல்லாட்டா ஆசாரிக்குடியில போயி இரு. செட்டியார் குடியில போயி இரு. அதுவும் முடியாதுன்னா எங்க பிள்ளைமார் குடியில வந்து இரு. ஆனால் பறக்குடியில போயி இருக்காதே! அது ஒனக்குக் கேவலம். எங்களுக்கும் கேவலம்”