பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒயிலாய் நடந்து...

15


தண்ணி வத்திடாது? ஒருவேள தண்ணி வத்தாம சாமி ஊருக்குள்ள வந்தா, ஊரு தாங்காதே. வரட்டும். பீடிக்கடை ஏஜெண்ட்ட உயிரோட துக்கிட்டுப் போவட்டும். மருவாதி கெட்ட பய.

கலப்பைகளைச் சரிபார்த்த தச்சர், ‘மம்பெட்டியை’ அடித்துக்கொண்டிருந்த கொல்லர், தங்க நகைகளை ‘ஒக்குட்டு’ செய்த தட்டார் ஆகிய ஆசாரிக் குடும்பங்களைக் கடந்து, ஊரின் நடுப்பகுதிக்கு வந்தார்கள். மானேஜ்மெண்ட் பள்ளிக்கூடம். இரண்டு பக்கமும் டிக்கடைகள், வெத்தலைபாக்குக் கடைகள் அனைத்தையும் தாண்டி கிழக்கே வந்தார்கள். ஊர்க்கிணறு, அதன் பக்கம் எல்லா நாடார் ஜனங்களுக்கும் பொதுவான காளியம்மன் கோவில்.

அவர்கள் கோவிலை நெருங்கும்போது, ஒரு பெரிய கூட்டமே நின்று கொண்டிருந்தது. மத்தியில் ஒரு சைக்கிள். அதன் ‘ஹாண்ட்பாரில்’ இரண்டு பெரிய பைகள், இரண்டு பக்கமும் தொங்கின. உள்ளே ஊதுபத்திகள், கர்ப்பூரங்கள், சிகரெட்டுகள், பீடிக்கட்டுகள், பின்னால் கேரியரில் வெற்றிலைக்கட்டுகள். சைக்கிள்காரன் வெளியூர்க்காரன். அடிக்கடி, அந்த ஊர்க் கடைகண்ணிகளில் சாமான்கள் போட்டுவிட்டுப் போகிறவன்.

அவன் கழுத்தை மளிகைக் கடைக்காரர் ஒருவர் நெரிக்காத குறையாகப் பிடித்துக்கொண்டு. “செருக்கி மவன பொலி போடுகிறோம் பாரு” என்று மிரட்டினார். கூட்டத்தில் ஒரு சிலர் “கழுத்தை நெரிடா” என்றனர். ஒரு சிலர் “விட்டுடுடா பாவம்” என்றனர். மெஜாரிட்டி வேடிக்கை பார்த்தது.

மாரிமுத்து நாடாரைப் பார்த்ததும், கழுத்தைப் பிடித்தவன். அதை விட்டுவிட்டு சைக்கிள்காரனின் துண்டைப் பிடித்தான். உலகம்மை, தன்னைப் பார்த்துதான், அவன் சைக்கிள்காரனை விட்டுவிட்டதாகக் கற்பனை செய்து பார்த்தாள். அவளுக்கு அந்தப் போலித்தனம் பெருமையாக இருந்தது. அதே நேரத்தில் கண்கள் பிதுங்க, உடம்பெல்லாம் ஆட, வியர்வையால் நனைந்து போயிருந்த சைக்கிள்காரனைப் பார்க்க, அவளுக்குப் பாவமாக இருந்தது. அழுகை வரும்போலவும் இருந்தது.

மாரிமுத்து நாடார் அதட்டினார்.

“என்னடா விஷயம் உலகம்மா, நீ மொதல்ல என் வீட்டுக்குப் போ. என்னப்பா விஷயம்?”