பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒயிலாய் நடந்து...

17



நூறுரூபா கடன் பாக்கி தரணும். போன வருஷம் கேட்டேன். நாளக் கடத்துறாரு. 'ஒமக்கெல்லாம் எதுக்கய்யா வேட்டி சட்டைன்னு' கேட்டேன். அத மனசுல கருவிக்கிட்டு. மனுஷன் நான் தமாசுக்குச் சொன்னத பெரிசு படுத்துறான். நீங்களும் 'ஊரு ஊருன்னு' தலைய ஆட்டுறியள, நெயாயமா -' என்று கேட்க நினைத்தான். பிறகு, 'உடம்பு உருப்படியாக ஊர்போய்ச் சேர வேண்டும்' என்று நினைத்து சைக்கிளைத் தள்ளினான்.

மாரிமுத்து நாடார் வீட்டுக்கு வேகமாகப் போனார்.

அவர் வீடு பழைய காலத்து வீடு. சில பகுதிகளை நாடார் நாகரிகமாகப் புதுப்பித்திருந்தார். நான்குபேர் படுக்குமளவிற்கு வெளியே திண்ணை இருந்தது. சிமிண்ட் திண்ணை. அதையொட்டி அணைத்தாற்போல் இருந்த மூன்று படிக்கட்டுகள், படிக்கட்டில் ஏறித்தான் வாசலுக்குள் நுழைய வேண்டும். அந்த அரங்கு வீட்டுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏழெட்டு அறைகள்.

மாரிமுத்து நாடார் உள்ளே நுழையும்போது. தாழ்வாரத்துக்கு அடுத்து இருந்த அறையில், அவர் மகள் சரோஜா, கோணிக்கொண்டும், நாணிக்கொண்டும் உட்கார்ந்திருந்தாள், அவளைச்சுற்றி அவள் அம்மா உட்பட நாலைந்து பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உலகம்மையும் அங்கே உட்கார்ந்திருந்தாள்.

சரோஜாவுக்கு முப்பது வயதிருக்கலாம். திருமணம் நடக்கும் என்று பத்து வருடமாகக் கற்பனை செய்து அலுத்து, களைத்து சலித்துப் போனவள். சின்ன வயதில் எப்படி இருந்தாளோ, இப்போது கழுத்து குறுகிவிட்டது. தார்க்கம்பு மாதிரி பிடிக்கச் சதையில்லாத உடம்பு. கண்கள் அமாவாசை இரவு மாதிரி ஒளியிழந்து கிடந்தன என்றால், வாயே தெரியாதபடி நீண்ட கோரைப்பற்கள் அடைத்திருந்தன. உயரமோ, சராசரிக்கும் கீழே: மார்பகம், ஆண்களுக்குக்கூட சற்றுத் தடிப்பாக இருக்கும். என்றாலும் அவளைப் பார்க்கும்போது, அரூபி என்ற வெறுப்போ சிரிப்போ வருவதற்குப் பதிலாக, ஒருவிதப் பரிதாபமே வரும். இப்படிப்பட்டவளுக்கும் ஆறைந்து ஆண்டுகளுக்கு முன்பு. சொத்துக்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். ஆனால் அவளுக்கு வாய்த்த அம்மாக்காரி, கிராமத்துப் பாணியில் சொல்லப்போனால் 'விளங்காதவா' 'மஞ்சக்கடஞ்சவா' பி.ஏ. படித்த மாப்பிள்ளைப் பையன் ஒருவனின் அய்யா ஒரு காலத்தில் பனையேறினார் என்பதற்காக, "பனையேறிக் குடும்பத்திலயா சரோசாவ குடுக்கறது? இதவிட அவள, எருக்குழியில வெட்டி