பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. சரோஜாவாகி...


லகம்மையும், சரோஜாவும் பிள்ளையார் கோவிலுக்குள் நுழையும்போது, கோவிலுக்கருகே கேட்பாரற்றுக் கிடந்த கருங்கல்லில் உட்கார்ந்திருந்த நான்குபேர் எழுந்தார்கள், நால்வரில் ஒருவன் மாப்பிள்ளைப் பையன், இருபத்து நாலு வயதிருக்கலாம். கருப்பும், சிவப்பும் கலந்த புதுநிறம். சுருட்டைக் கிராப்பு: நெட்டை நெற்றி. இரு கண்களையும், தனித்தனியாய்ப் பிரித்துக் காட்டும் செங்குத்தான மூக்கு. சிரிக்காமலும், சீரியஸாக இல்லாமலும் இருக்கும் வாய். பையன், தந்தைக்கு ஒத்தாசையாக வயலில் வேலை பார்த்திருக்கவேண்டும். இல்லையென்றால், இந்தக் காலத்துப் பையனான அவனுக்கு. உடம்பில் அப்படி வைரம் பாய்ந்திருக்க முடியாது. கிழவிகள்கூட திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அமைந்த அவன் அழகை. பீடிக்கடை ஏஜெண்ட் ராமசாமி அள்ளிப் பருகிக்கொண்டிருந்தான். உலகம்மை வந்த பிறகும், அவளைப் பார்க்காமலே, இவனையே பார்த்தான் என்றால், அது நாகரிகத்தால், பண்பால் உந்தப்பட்ட செயலல்ல. பையனின் 'களையே காரணம். 'பிராந்தன்' வெள்ளைச்சாமி, அங்கேயும் 'பராக்குப்' பார்த்துக் கொண்டிருந்தான், உலகம்மை, சரோஜா. மாப்பிள்ளையைவிட் அவனுக்குப் பிள்ளையாரின் வயிறுதான் பிடித்திருந்தது. நாலாவது மனிதரான பையனின் சித்தப்பா, நடுத்தர வயதுக்காரர். அந்த இரண்டு பெண்களையும், விழுங்கி விடுவது போல், கூர்மையாகப் பார்த்துவிட்டு, தன் சந்தேகத்தைக் கேள்வியாக்கினார்.

"இதுல எது பொண்ணு ?"

"குட்டையா மாங்கா மூஞ்சி மாதிரி என்று இழுத்தான் வெள்ளைச்சாமி. ராமசாமி, அவன் தொடையைக் கிள்ளிவிட்டு "என்ன கேக்கரீக" என்று தெரியாதவன் போல் கேட்டான்.

"இதுல எது பொண்ணு? பச்சைச் சீலையா, செவப்புச் சீலையா?"

"செவப்புத்தான். ஏல, வெள்ளையா. கோவிலுக்குள்ள போயி விபூதி வாங்கிட்டு வால."

வெள்ளைச்சாமி, விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மாப்பிள்ளைப் பையன், இரண்டு பெண்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். பின்னர் கோவிலுக்குள் அவர்கள் தலை மறைந்ததும், நிதானத்திற்கு வந்தான். உலகம்மைதான் மணப்பெண்ணாக இருக்க முடியும் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை . 'இந்தச்