பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவாகி....

23



"லோகநாதன்னு பேரு. லோகுன்னு கூப்பிடுவாவுகளாம்."

உலகம்மை ஒருகணம் திடுக்கிட்டாள். எந்தப் பேருக்கு எந்தப் பேரு பொருத்தம்? என்றாலும் இறுதியில் சுதாரித்துக் கொண்டாள்.

"பரவால்லிய. லோகநாதன் லோகாயிட்டாரு. சரோசா, சரோஜ்ஜாயிட்டா. சரோஜ், லோகு சரியான பொருத்தந்தான், எக்கா நீ நெசமாவே குடுத்து வச்சவாதான்..."

சரோஜா பெருமையோடு தலையைத் தூக்கிக்கொண்டு, உலகம்மையின் கையைப் பிடித்துக்கொண்டு அழுத்தினாள். "நான்... லோகில்லக்கா" என்று சொல்லிச் சிரித்தாள் உலகம்மை.

இருவரும், பண்ணை வீட்டுக்குள் நுழையும்போது "போயும்... போயும் பனையேறிப் பய மவனக்காட்டி என் பொண்ண கரயேத்தணுமாக்கும்" என்று மாரிமுத்து நாடாரின் கையைப் பிடித்தவள் சொல்லிக் கொண்டிருந்தாள். நாடார் உலகம்மையின் முகத்தைப் பார்த்தார். ஒரு சுழிப்பும் இல்லை . கேட்டிருக்காது... இருந்தாலும்.., இந்த ‘பயபெண்டாட்டிக்கு இப்படி வாய் ஆகாது', ஏதோ சொல்லப்போன மனைவிக்காரியை அடக்கினார்.

"சும்மா ஏன் மூளியலங்காரி, மூதேவி, சண்டாளி மாதிரி பிலாக்கணம் பாடுற?"

உலகம்மையும், சரோஜாவும் வீட்டுக்குள் போனபோது வெள்ளைச்சாமி வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்.

"பெரிய்யா, பெரிய்யா! ஒலகம்மய மாப்பிள்ளைக்கு பிடிச்சிப் போச்சி, பிடிச்சிப்போச்சி. அவளத்தான் கட்டுவேன்னு சின்னய்யா கிட்ட ஒத்தக் கால்ல..."

மாரிமுத்து நாடார் திடுக்கிட்டாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

"ஏல பொண்ணு பிடிச்சிருக்குன்னாங்களா? ஒலகம்ம பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா?"

வெள்ளைச்சாமி சிறிது யோசித்தான். பிறகு பேசினான்:

"பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாவ..."

மாரிமுத்து நாடாருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. 'எப்படியோ சமாளிச்சாச்சு. செவப்பு சேலதான பொண்ணுன்னு கேட்டிருப்பான்.