பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஒரு கோட்டுக்கு வெளியே ...



காரியத்திற்குத் தான் தயாராகிக் கொண்டிருப்பது போலவும் நினைக்கிறவன்.

பலவேச நாடாரும், மச்சான் மாரிமுத்துவை நேரடிப் போரில் ஜெயிக்க முடியாது என்று உணர்ந்து, புதிய சூழ்நிலையை டைரெக்ஷன் செய்யத் தீர்மானித்து விட்டார். 'மச்சான்காரனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்குச் சொத்து இருக்கு. 'கொள்ளி' இல்லை. (அப்பனுக்குக் 'கொள்ளி' வைக்கும் ஆண்பிள்ளை என்ற அர்த்தத்தில் இது தொழிலாகு பெயராகும்) ஒரே ஒரு பொண்ணு. ஒரு பயலும் ஏறிட்டுப் பாக்க மாட்டான். பேசாம, தங்கப்பழத்துக்குக் கட்டிவச்சிட்டா?' இப்படித் திட்டம் போட்டார்.

மாரிமுத்து நாடாருக்கும் ஒரு ஆசை. 'மகள் 'முத்தத்து நிழலு முதுகுல படாம வீட்டுக்குள்ளேயே இருக்கணும்' என்கிற ஆசை. அது நிறைவேறணுமுன்னா இரண்டே இரண்டுதான் தோணியது. 'ஒண்ணு பொண்ண வீட்டுக்குள்ளயே கல்யாணம் பண்ணாம வச்சிருக்கணும். இல்லன்னா சர்க்கார் உத்தியோகஸ்தனுக்குக் குடுக்கணும்.' மாரிமுத்து நாடாரும் புத்திசாலி. முடியாத 'கச்சிக்கு' மகளை தங்கப்பழத்திடம் தள்ளிவிடலாம். அதுவரைக்கும் பல இடத்தைப் பார்க்கலாம் என்று நினைத்து, மச்சினனுக்கு "பாக்கலாம், ஐப்பசி வரட்டும்" என்று மொட்டையாகச் சொல்லியனுப்பினார். மச்சான், இப்படி மொட்டையாகச் சொல்லியனுப்பியதை 'மொட்டைத்தனமாக' எடுத்துக் கொண்டார் பலவேசம். அதே நேரத்தில் "அங்க சுத்தி இங்க சுத்தி எங்கிட்டதான் சுத்தணும். வயலத் தின்ன எலி வரப்புக்குள்ளதான்... கிடக்கும்” என்று நம்பிக்கையானவர்களிடமும் சொல்லிக் கொண்டார். சரோசாவுக்கு வந்த சில 'பிள்ளை வீடுகளை' ஆள் வைத்துச் சொல்லியும், மொட்டைக் கடுதாசி போட்டும் குலைத்தார். மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன். ஊருக்கு வெளியே புளியந்தோப்புக் கருகிலேயே ஆட்களை உட்காரவைத்து, அவசியமானால் அவரும் உட்கார்ந்து, "நம்ம மாரிமுத்து மவளுக்குக் கல்யாணமாம். போவட்டும். அவளுக்கும் முப்பது வயசாச்சி. கூனிக்குறுகிப் போயிட்டா. ஆண்டவனாப் பாத்து புத்திமாறாட்டமான அந்தப் பொண்ணுக்கு புத்திசாலி மாப்பிள்ளயா குடுக்கணும்" என்று ஜாடைமாடையாகப் பேசுவார்.

இன்று பெண் பார்க்க வந்த கோஷ்டியையும், இப்படிக் கலைக்கத் திட்டம் போட்டிருந்தார். ஆனால், அவர் புளியந்தோப்பில் இருந்து 'கலைப்பு' வேலை நடத்துவது ஊரறிந்த ரகசியமாகி விட்டதால்.