பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சதியினைப் புரிந்து...

33


ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு. தீப்பெட்டியைத் தேடுபவள்போல். அடுப்பங்கரையில் தேடினாள். நடப்பதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி திடீரென்று வெடித்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். கண்பார்வை மங்கல். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பனையேறிக் கொண்டிருந்தார். ஒருநாள் பாதிப் பனையில் இருந்து கீழே விழுந்து, இடதுகால் முறிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் போய் காலை ரிப்பேர் செய்து கொண்டாலும், பனையேறவும் முடியவில்லை. சரியாக நடக்கவும் முடியவில்லை. உலகம்மை, அவரைப் பனையேற விடவும் இல்லை. அப்பப்போ சொல்ல முடியாத துயரங்கள் வரும்போது, லேசாகப் ‘பட்டை’ போட்டுக் கொள்வார். அதுவும் மில்லிக் கணக்கில்தான்.

“அடுப்ப மூட்டாண்டாம்.”

“ஏன்?”

“எனக்குச் சோறு வேண்டாம்.”

“ஏன்?”

“வயிறு நிரஞ்சிட்டு. நீ வாரதுக்கு முன்னால பலவேசம் குடுத்ததுல வயிறு உப்பிட்டு. ரெண்டு நாளைக்கு ஒண்ணும் வேண்டாம்.”

“அவன் கிடக்கான். கட்டயில போறவன். திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தான் துணை. ஒம்மப் பேசினதுக்கு உதிரமாடன் அவன கேக்காம விட மாட்டான்.”

“நீ செய்தது சரியா? பெரிய இடத்துல ஆயிரம் நடக்கும். நமக்கென்ன வந்தது? நீ ஏன் மாரிமுத்து மவளோட போவணும்?”

“நானாப் போவல. எனக்கு ஒரு பாவமுந்தெரியாது. வேலக்காரி மாதிரி துணையாத்தான் போனேன். இப்படிக் குளறுபடி நடக்குமுன்னு தெரிஞ்சா போயிருக்கவே மாட்டேன். சோம்பேறிப்பய தொழில் நடத்தலாமுன்னுலா கேட்டுட்டான். அவன் நாக்குல புத்துநோயி வர.”

“நீயும் அவனக் கூடக்கூடப் பேசிட்ட வீட்டு நிலத்த விடச் சொல்லுறான். அதுகூடப் பரவாயில்ல. கழுத்தப்பிடிச்சி தள்ளுவேன்னு வேற சொல்லிட்ட அவன் என்ன பண்ணப் போறானோ? அவன் மொவன் துளசிங்கம் ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிட்டா?”

“அடிப்பான்னு பயப்படுறீரா? அடிக்கும்போது பார்த்துக்கிடலாம்.”