பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஒரு கோட்டுக்கு வெளியே ...


மாயாண்டி, பதில் சொல்லாமல், குலுங்கிக் குலுங்கி அழுதார். அவர் அழுகையில் ஏற்கனவே தொங்கிப் போயிருந்த நார்க்க்ட்டில், அசைந்து கொடுத்தது. இல்லாமையில் எழுந்த அந்த அவலத்தனமான அழுகை, உலகம்மையை கலக்கிவிட்டது. அய்யாவின் அருகில்போய், அவர் தலையை மெளனமாகக் கோதிவிட்டாள். மாயாண்டி விம்மிக் கொண்டே பேசினார்:

“ஒன் அம்மாக்காரி என்ன நிர்க்கதியா விட்டுட்டு செத்துட்டா. என் அம்மா என்ன விட்டுட்டு அஞ்சு வயசுல போயிட்டா. ஒனக்காவத்தான் ஏறாத பனெல்லாம் ஏறுனே. இல்லன்னா எப்பவோ மண்டயப் போட்டுருப்பேன். அவன் பலவேசம் பணக்காரன், சல்லிப்பயல், ஒண்ணுகிடக்க ஒண்ணு...”

“நீரு ஏய்யா சொன்னதையே சொல்றிரு. அடிக்கும்போது பார்த்துக்கிடலாம்.”

“அடிச்சா பரவாயில்லழா. நீ தனியா இருக்கும் போது ராத்திரி வேளையில அவமானப்படுத்திட்டா - பலவேசம் அப்பிடிப்பட்ட பயல்தான். சொந்த சித்தி மவளயே வச்சிக்கிட்டிருந்த பய.”

உலகம்மை திடுக்கிட்டாள். இந்த மாதிரியும் ஒன்று நடக்கலாம் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அப்படி நினைக்கையில், அவள் உடம்பெல்லாம் ஆடியது. அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் ஏங்கி ஏங்கி அழுதார். அய்யா, அவரின் அழுகைக்குக் காரணமான பலவேசம், அந்த பலவேசம் கோபப்படக் காரணமான மாரிமுத்து நாடார். அவரின் கல்யாணச் சூழ்ச்சி அத்தனைபேர் மீதும் அவளுக்குத் தணியாத சினம் ஏற்பட்டது. ஆவேசம் வந்தவள்போல் பேசினாள்:

“அப்டி ஒண்ணும் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். நீரு சீவுன பாள அரிவா இந்தா இருக்குய்யா. நல்லா நினைச்சிப்பாரும். அஞ்சி வருஷத்துக்கு முன்ன நான் பெரியாளாகு முன்னால கருப்பசாமி என்கிட்ட ஏதோ சொன்னாமுன்னு அவன் பணக்காரன்னுகூடப் பாக்காம இந்த அரிவாள வச்சிக்கிட்டு ஓட ஓட விரட்டுனீரே, ஞாபகம் இருக்கா? நான் புலிக்குப் பொறந்தவா. ஒம்மோட மவள். எந்தப்பய வேணுமுன்னாலும் வாலாட்டிப் பாக்கட்டும். அவன் தலய வெட்டி ஒம்ம காலுல வைக்காட்டி, நான் உலகம்மல்ல. பொம்புள மாதிரி ஏய்யா அழுவுறீரு?”