பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை உரைத்து...

37


தெரிந்தும் குளிக்கிறார்கள். அதே அசுத்தம், குளிக்கிற இடத்தில் இருந்தால் லோகு கட்டிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்த தோட்டப் பிரபு, தன் தோட்டத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லி விட்டார். “நீ என் மவள வேண்டாங்ற. அதனால, என் நிலமும் உனக்கு வாண்டாம்” என்று அவர் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாமல் “பிள்ளைய பெரியதா ஆயிட்டு. நாங்களே பயிர் வைக்கப்போறோம்” என்று சொல்லிவிட்டார்.

லோகு பி.யூ.சி.யில், விஞ்ஞானத்தில் ‘ஏ’ பிளஸ் வாங்கியிருந்தான். இதர பாடங்களிலும் நல்ல மார்க். ஹை பஸ்ட்கிளாஸ்: எம்.பி.பி.எஸ்ஸுக்கு விண்ணப்பித்தான். இவ்வளவுக்கும். பேக்வார்ட் கம்யூனிட்டி கிடைச்சதா? போகட்டும். டெட்டி கலெக்டர் பரீட்சை எழுதித் தேறினான். ரிசல்ட் முன்கூட்டியே அதாவது பரீட்சைக்கு முன்கூட்டியே அடிபட்ட பெயர்கள்தான் லிஸ்டில் வந்தன.

ஒழியட்டும். இன்னார் இன்னாரின் மருமகனாகப் போகிறவர். ஆகையால் அவர் அதிகாரியாகணும் என்று பகிரங்கமாகச் சொல்லியிருந்தால் பிரச்சினையே இருக்காது. ஆனால் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை, யோக்கியப்படுத்துவதற்காக, பரீட்சை என்று ஒன்று வைப்பதும், ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி, அவர்களை ஏமாளிகளாக்கி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு பதவிகள் கொடுப்பதையுந்தான் அவனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியவில்லை. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாமிகள், தங்களின் சிபார்சு காம்ப்ளெக்ஸை மறைப்பதற்காக ‘தாம் தூம்’ என்று குதிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இத்தனையும் நடந்தாலும் நம் நாடு ஜனநாயகத்தின் காவலன் என்கிறார்கள். இது நேஷனல் ஜனநாயகம்; தீவிரமாகச் சிந்தித்தால் நாகரிகமான பிரபுத்துவம்.

திறமைக்கோ நேர்மைக்கோ மதிப்பில்லை என்று நினைத்து மனம் வெந்து போனவன் லோகு. அதற்காக, ஒருசில வசதிபடைத்த பையன்களைப்போல் ஹிப்பி முடியை வைத்துக் கொண்டு மிகப்பெரிய ‘இன்டெலக்சுவலாக’க் காட்டுவதை அவன் வெறுத்தான். அப்படி இருப்பவர்கள் ‘எக்லிபியனிஸ்ட்’ என்பது அவன் கருத்து.

திருமணத்திலும் அவன் ஒரு கொள்கை வைத்திருந்தான். சமுதாயப் பிரச்சினைகளை அலசிப்பார்ப்பதற்கு, தனக்கு வாய்ப்பவள்