பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஒரு கோட்டுக்கு வெளியே ...



முறையில் பேசிய ஊரார் இப்போது உலகம்மை கல்யாணத்தை நிறுத்தியது தத்தம் வீட்டில் நடக்கவிருந்த கல்யாணம் நின்று போனதுபோல் பாவித்துக் கொண்டார்கள்.

உலகம்மை, தன் செயலுக்காக அதிகமாக வருந்தவில்லை . என்றாலும், ஒருவிதத் தனிமை அவளைப் பயங்கரமாக வாட்டியது. ஆனாலும், அவள் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள். "ஒருவன் ஒரு கொல பண்ணியிருப்பான். அத பாக்காத ஜனங்க அவன போலீஸ் அடிச்சிழுத்துக்கிட்டு போவும் போது அந்தக் கொலகாரன் மேலயும் இரக்கப்படும். இது இயற்கை. சரோசாக்கா தங்கமானவா. அவா கல்யாணம் நின்று போனதுல இரக்கப்பட்டு என்மேல கோபப்படுவதும் இயற்க. இத பெரிசா எடுத்துக்கக் கூடாது. போவப் போவ சரியாயிடும். 'நல்லவன் செய்றதவிட, நான் செய்றது மேலன்னு' சும்மாவா சொல்லுவுராவ?"

உலகம்மை, ஊர்க்கண்ணில் இருந்து கொஞ்ச நாளைக்கு' ஒதுங்கி இருக்க விரும்பினாள். 'மாரிமுத்து நாடார்வயல மறந்தாச்சி. பலவேசம் வயலுல வேல பார்க்கதவிட சாவலாம். பீடி சுத்துற பொழப்பும் போயிட்டு, பேசாம ரோசாபூக்கிட்ட பீடி சுத்திக் கொடுப்போம். அவள் நெறய இல வாங்கச் சொல்லலாம்.'

அவள். ரோசாப்பூவை அணுகியபோது, "எக்கா ஒங்கள மாதிரி வருமா" என்று சொல்லும் அந்த ரோசாப்பூ, "இதுக்குத்தான் முன்னோசன வேணுங்றது. அவன் ராமசாமி அப்டி என்ன பண்ணிட்டான்? அவனப்போபி, பேசாத பேச்சுல்லாம் பேசிட்டியே. அவனுக்குத் தெரிஞ்சா என் பீடி அவ்வளவையும் கழிச்சிப்படுவான். பேசாம அவங்கிட்ட மன்னாப்பு கேட்டுக்க" என்று உபதேசம் செய்தாள்.

என்ன செய்யலாம் என்று உலகம்மை தவித்துக்கொண்டிருந்த போது, சட்டாம்பட்டியில் ஒரு மிராசுதார் வயலில் நடவு வேலை இருப்பதாகச் செய்தி வந்தது. அந்த ஊர்ப் பெயரைக் கேட்டதும், ஒரு பிடிப்பு ஏற்படுவதை, அவள் உணர்ந்தாள். அந்த ஊர்லே பிறந்து அந்த ஊர்லே வளர்ந்ததுபோன்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. "ரெண்டார் ரூபாதான் கெடக்கும். அஞ்சி மைலுவேற நடக்கணும். ஒனக்கு சம்மதந்தானா” என்று கூரோடி' சொன்னபோது அதெல்லாம் பார்த்தா முடியுமா? ரெண்டு ரூபான்னாகூட வருவேன். நெலம அப்டி" என்று பதிலளித்தாள். 'கூரோடி' கூட 'ரெண்டுன்னு சொல்லியிருக்கணும். அர ரூபாய அடிச்சு மொச்சக் கொட்ட வாங்கி வருத்திருக்கலாம்' என்று முன்யோசனை இல்லாமல் போனதற்காக. 'பின் யோசனை' செய்தான். இதுபோன்ற