பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடியது கண்டு...

63


“”இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நடத்த இருந்த கவுலப்பத்தி ஏன் ஒரு ஜனமும் பேச மாட்டக்கு ஊரு உலகத்துல ஆயிரம் இருக்கும். நமக்கென்ன? நான் ஏன் எடாத எடுப்பு எடுத்து, படாதபாடு படனும்: பாவம் சரோசாக்கா! அவளுக்குத் துரோகம் பண்ணிட்டேனே.”

சிந்தித்துக்கொண்டே வந்ததால், குட்டாம்பட்டியை நெருங்கியது அவளுக்கே தெரியவில்லை. சண்முகம் மாடுகளைப் ‘பத்திக்கொண்டு’ போனார். இவர் மலேயாவில் இருந்தவர். பிறந்த பூமியில் இறக்க வேண்டும் என்று நினைத்தவர்போல், ஆயிரக்கணக்கான ரூபாயோடு ஊருக்கு வந்தார். அவர் போட்டிருந்த சட்டை அப்படி மினுங்கியது. பெண்டாட்டி பிள்ளைகளை, என்ன காரணத்திற்காகவோ அங்கேயே விட்டுவிட்டு. இவர் மட்டும் இங்கே வந்தார். “ஒன்னப் பாக்க ஆசயா இருக்கு. ஒன் மொகத்த ஒரு தடவயாவது காட்டிட்டுப் போன்னு” கடிதங்கள் எழுதிய உறவுக்குக் கைகொடுக்க ஓடிவந்தவர். சூதுவாதில்லாத இவரிடம் இருந்த பணமெல்லாம் கறக்கப்பட்டு, இப்போது, வேண்டாத ஆளாக, மலட்டுப் பசுவாக, வயிற்று நோயைத் தீர்க்க வேண்டிய அவசியத்தால் பண்ணையார் ஒருவரின் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

முன்னால் போய்க் கொண்டிருந்த அவரையே பார்த்துக் கொண்டு, அவர் வரலாற்றில் தனக்குத் தெரிந்த பகுதியை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த உலகம்மை, தன் நிலைமையை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். தலையில் கொஞ்சம் சுமை இறங்கியது போலிருந்தது. அய்யாவுக்குச் சோறு பொங்கணுமே என்று நினைத்து. அவசரமாக நடக்க எண்ணி குறுக்கே வந்த ஒரு மாட்டின் வாலைப் பிடித்துக்கொண்டு, அவள் முந்தப்போனபோது, மாடுமேய்ச்சியாக மாறிய மலேயாக்காரர். அவளைப் பார்த்துவிட்டு திடுகிட்டவர்போல் அப்படியே நின்றார்.

“ஒலகம்மா, ஒனக்கு விஷயந் தெரியாதா?”

“என்னது அண்ணாச்சி?”

“ஒங்க அய்யாவ காளியம்ம கோவில் முன்னால கோட்டக்கிழிச்சி நிறுத்தியிருக்காங்க. மாரிமுத்து நாடாருக்குக் கடன் குடுக்கணுமோ? அடக் கடவுளே, ஒனக்கு விசயம் தெரியாதா? பாவம் மத்தியானம் மாடுபத்திக்கிட்டு வரும்போது, சின்னையா அந்தக் கோட்டுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருக்கறத பாத்ததும் நான் அழுதுட்டேன். மலேயாவுல இப்படிக் கிடையாது.”