பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"நீ இப்டி பேசுனா அவரு எப்டி விடுவாரு? பெரிய மனுஷங்கிட்ட பேசுற பேச்சா இது"

மாரிமுத்து நாடாரும், தான் பெரிய மனுஷன் என்று நினைத்தவர் போல் அழுத்தமாகவும் ஆபாசமில்லாமலும் மத்தியஸ்தரிடம் பேசினார்:

"மச்சான் அவளால இப்ப பணத்த குடுக்க முடியுமா முடியாதான்னு கேளும். பணத்துல ஒரு பைசா குறையாம வருமுன்னால, அவன விட, மாட்டேன், நீரு வேணுமுன்னா அவளுக்குப் பணம் குடும். பணங்குடுக்காம மட்டும் அவா அவன கோட்டுக்கு வெளில இழுத்தான்னா அப்புறம் பொம்பிளய அடிச்சேன்னு நீங்க வருத்தப்படக்கூடாது. ஆமாம்."

இதற்குள், உட்கார்ந்திருந்த மாயாண்டி மீண்டும் படுத்துக் கொண்டார். உடனே, என்னமோ ஏதோ என்று கீழே குனிந்த உலகம்மையிடம் "தண்ணி வேணும், தண்ணி வேணும், தாகமா இருக்கு" என்று முனங்கினார். பிறகு கத்தினார்.

சுற்றி நின்ற கூட்டத்தினர், தத்தம் இயலாமைக்கு. பிராயச்சித்தம் தேடுபவர்போல் "ஏ தண்ணி கொண்டாங்க தண்ணி கொண்டாங்க" என்றார்கள். மாரிமுத்து நாடார்கூட வெள்ளைச்சாமியைப் பார்த்து, தண்ணீர் கொண்டுவரச் சொல்வதற்காக, தன்னையறியாமலே, லேசாக வாயைக்கூடத் திறந்தார். ஒருவர் பக்கத்தில் இருந்த ஊர்க்கிணற்றைப் பார்த்துப் போனார்.

உலகம்மை அய்யாவின் காலைப் பிடித்து விட்டாள், தொண்டையை நீவி விட்டாள். முதுகைத் தடவி விட்டாள். தலையைக் கோதி விட்டாள். நெற்றியை வருடி விட்டாள். தோளைத் தேய்த்து விட்டாள். பிறகு கம்பீரமாக வெளியே வந்தாள்.

"யாரும் தண்ணி குடுக்காண்டாம். எங்க அய்யாவுக்கு என்ன குடுக்கணுமுன்னு எனக்குத் தெரியும்."

உலகம்மை. கூட்டத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வேகமாக நடந்தாள். அவள் போவதையே, கூட்டத்தில் பெரும் பகுதி பச்சாதாபமாகப் பார்த்துக்கொண்டு நின்றது. அவள் அய்யாவுக்குத் தண்ணீர் கொண்டுவர, வீட்டுக்குப் போவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.