பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. கோப ரூபியாய்.....


"கோனச்சத்திரம்" டவுனா? கிராமமா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு டவுன் மாதிரி விரிந்தும், கிராமம் மாதிரி மரம் மட்டைகளோடும் அந்த ஊர் இருந்தது.

மயானத்திற்கு அருகே, செவ்வகம் மாதிரியும், கூம்பு மாதிரியும் அமைந்த மதில் சுவருக்கு மத்தியில், செங்கற்படிவங்களால் கட்டப்பட்ட சிவப்புக் கட்டிடம் உள்ளது. மதிலுக்கும், அந்தக் கட்டிடத்திற்கும் இடையே பல மரங்கள். குறிப்பாக மதில் வாசலிலிருந்து உள்ளே ' போனால், பெரிய பெரிய மரங்கள் தெரியும். "இதுக்குமேல நீ உள்ளே போறத விட எங்ககிட்ட வந்து தூக்குப்போட்டுச் சாவலாம்" என்று குறிப்பால் உணர்த்தும் பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. வாடிக்கைக்காரர்களுக்கு ஞாபகப்படுத்துவதுபோல், மதிலை ஒட்டி சில கருவேல மரங்களும் 'பட்டைகளை'க் காட்டிக் கொண்டு நின்றன.

இரண்டு பக்கமும் சின்னச்சின்ன செங்கற்களால் நடப்பட்டிருந்த பாதை வழியாக, கண்ணை மூடிக்கொண்டு போனால்கூட, நேராய் அந்தக் கட்டிடத்தின் படிக்கட்டில் முட்டலாம். படிக்கட்டுக்கு மேல் இருந்த வராண்டாவில் ஒரு நாற்காலி, எதிரே ஒரு ஹைதர் அலி மேஜை.. நாற்காலியில், ஒரு காலை முக்கோணம் மாதிரி மடித்து வைத்துக்கொண்டு, அதில் தலையை வைத்துத் துயில் கொண்டிருந்தார் ஹெட்கான்ஸ்டபிள். வெறும் பனியனும், ட்ரவுசரும் போட்டிருந்தார். ட்ரவுசர் பட்டையைக் கிழிப்பதுபோல், அவர் வயிறு துருத்திக் கொண்டிருந்தது. எதிரே மேஜையில் காக்கிச் சட்டை கிடந்தது. கனத்த அந்தக் காக்கிச்சட்டையை, காற்றோ அல்லது ஒருவேளை வாடிக்கைக்காரனோ தூக்கிக்கொண்டு போய்விடக் கூடாது என்ற இயல்பான சந்தேகப் புத்தி போகாதவர்போல், ஹெட்கான்ஸ்டபிள், தன் தொப்பியை அதன் மேல் வைத்திருந்தார். தொப்பியும் தொலைந்து விடக்கூடாது என்று. தன் வலதுகை அதைப் பிடித்திருக்க லத்திக்கம்போடு இருந்த இடது கையை, இன்னொரு பக்கம் வைத் திருந்தார். மயானத்திற்கருகே இருந்த அந்தக் கட்டிடத்தில், ஏறக்குறைய செத்து விட்டவர்போல், அவர் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளங்கை, எதையோ வாங்கத் தயார் நிலையில் இருப்பதுபோல், கிண்ணம் மாதிரி போதிய இடைவெளியுடன் குவிந்து கிடந்தது.

உள்ளே முதலாவது அறையில், சுவரோடு ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் 'ரைட்டர்' எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.

கோ .6.