பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோப ரூபியாய்...

75


“ஒங்களுக்கு இல்லாததா? இப்ப செத்த நேரம் விடுங்க. நொடியில கொண்டு வாரேன். நாலக்கின்னா கிடைக்காது.”

“பரவாயில்ல. நீ பெரிய ஆளுதாண்டா. ஒனக்குப்பதிலா நான் உள்ள போயி நிக்கனுமுன்னுகூடச் சொல்லுவே.”

லாக்கப்பிற்குள் இருந்தவர்களும், வெளியே நின்றவரும் சிரித்த சிரிப்பு, ரைட்டரின் சிருஷ்டி வித்தையைக்கூட லேசாகக் கலைத்தது. லேசாக, முகத்தைச் சுழித்துக் கொண்டார்.

வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள், வாசல் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டுப் படக்கென்று விழித்தார். சின்ன வயசில், பாட்டிகூடப் படுத்து, பல பேய்க் கதைகளைக் கேட்டுக் கெட்டுப்போன அவர், தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பவள் மோகினிப் பிசாசாக இருக்கலாமா என்று சந்தேகப்பட்டார். திடீரென்று எழுந்து லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு “யாரது யாரது” என்றார். ‘பதுங்கிவிட்டு வெட்டினான்’ என்று எழுதலாமா, அல்லது வெட்டிவிட்டுப் பதுங்கினான் என்று எழுதலாமா என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த ரைட்டரும். அவர் போட்ட கூச்சலில் வெளியே வந்தார். கான்ஸ்டபிளும் அங்கே ஓடிவந்தார். நெருங்கி வந்து நின்று கொண்டு, போலீஸ் படிக்கட்டில் ‘ஏறலாமா, வேண்டாமா?’ என்று யோசிப்பதுபோல் நின்ற பெண்ணைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகிலாகவே இருந்தது. ‘கொலைக் கேஸா?’

ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார்.

“ஏய் யார் நீ மரியாதியா சொல்லு.”

“என் பேரு உலகம்மை. குட்டாம்பட்டியில இருக்கேன். எங்க அய்யாவ வாங்குன கடன குடுக்கலன்னு கோட்டுக்குள்ள நிறுத்தியிருக்காங்க.”

“கோட்டுக்குள்ளன்னா?”

“நீங்க இங்க ஜெயிலுக்குள்ள போட்டு அடைக்கது மாதிரி ஒரு கோட்ட வரஞ்சி அதுக்குள்ளேயே நிக்க வைக்கறது. மத்தியானத்திலிருந்து எங்க அய்யா கஞ்சி தண்ணி குடிக்காம அங்கேயே கிடக்காரு.”

உலகம்மையால் அழாமல் இருக்க முடியவில்லை. ரைட்டர் அவள் பேசுவதில், ஏதாவது சிருஷ்டிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார்.