பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூண்டுக்குள் சென்று...

89



“வச்சிக்கிட்டு' என்ற வார்த்தை அவனுக்கு இன்பத்தையும், அவளுக்குப் பேரின்பத்தையும் கொடுத்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்து, புன்னகை செய்து கொண்டார்கள். ஆண்டாண்டுக் காலமாகக் குடும்பம் நடத்திப் பிள்ளை பெற்று, பேரன் பேத்திகளை எடுத்தவர்கள் போல் சிரித்துக் கொண்டார்கள். அந்த எண்ணத்தை அவள் வளாவிட விரும்பாதது போல் பேசினாள்.

"சரோசாக்காவதான் வேண்டான்னுட்டிங்க."

"நான் வேண்டான்னோ பிடிக்கலன்னோ சொல்லல. நீ ரகசியமா வந்து பார்த்ததக்கூடச் சொல்லல. ஒரு பொண்ண பிடிக்கலன்னு வெளிப்படையா சொல்றது மிருகத்தனமுன்னு எனக்குத் தெரியும். அதனால பொதுப்படையா இப்பக் கல்யாணம் வேண்டாம்னுதான் சொன்னேன்."

"எப்ப பண்ணிப்பீங்க?"

"கடவுளுக்குத்தான் தெரியும். ஏற்கனவே ஒன்கிட்ட சொன்னது மாதிரி நான் கொம்பில் பூச்சூடிய கிடா. எப்ப கோவிலுல வெட்டினாலும் சரிதான். ஆனால் என்னப் பொறுத்த அளவுல கல்யாணம் நடந்து. நடந்த வேகத்திலேயே முடிஞ்சி போச்சி! இனிமேல் நடந்தாலுஞ் சரி தான். நடக்காட்டாலுஞ் சரிதான். சொல்லுறது புரியுதா சரோஜா?"

உலகம்மை, அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் உதடுகள் துடித்தன. இமைகளில் நீர்தேங்கி நின்றது. அவன் சொன்னது புரிந்தது போலவும், புரியாமல் இருந்திருந்தால் தேவலாம் என்பது போலவும், அவள், அவனை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு, அவனையும் ஏங்க வைத்து, இறுதியில் மௌனமாகக் கண்ணீர் விட்டாள்.

அவள் கண்ணீரைத் துடைத்துவிடத் துடித்த லோகு, கைகளைப் பின்பக்கமாகக் கொண்டு போய்க் கட்டிக் கொண்டான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. அவன் கண்களும், இப்போது நீரைச் சுமந்தன, கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

"ஒனக்குப் படிக்கத் தெரியுமா?"

"ஆறு வரக்கிம் படிச்சேன் எளுத்துக்கூட்டி படிச்சிடுவேன்."

அவன் மடமடவென்று ஒரு தாளில் எழுதினான். பிறகு "இதுதான் என் அட்ரஸ். என் உதவி எப்பவாவது தேவன்னா எழுது" என்று சொல்லிவிட்டு, தாளை அவளிடம் கொடுத்தான்.

கோ.7.