பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு சத்தியத்தின் அழுகை 9


திடீரென்று பெரியசாமி நாடார் "பங்கை" எடுத்து சுப்பு நாடாரிடம் நீட்டினார். உடனே தேவர் தலைவர், அதைத் தட்டி விட்டார். தேங்காய்த் துண்டுகளும், வாழைப்பழமும் மட்டும் சிதறி ஓடவில்லை. சுப்புநாடார் ஏற்கெனவே எண்பதைத் தாண்டியவர். சின்னசாமித் தேவர் தட்டிய வேகத்தில், அந்தப் பெரியவர் நிலை குலைந்து கீழே விழ, அவர் தலை, தேங்காய்களை உடைப்பதற்காக வைத்திருந்த அரிவாளில் பட்டு, ரத்தம் நீரூற்றுப் போல் பொங்கியது. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி நாடாருக்கு மனசு கேட்கவில்லை. தேவர் உட்பட யாரும் எதிர்பாராமல் நடந்த இந்த அசம்பாவிதத்தைப் பார்த்ததும், மாயாண்டி நாடார், பெரியவரின் மண்டையைப் பிளந்த அதே அரிவர்ளை எடுத்து, சின்னசாமித் தேவரை, கழுத்தில் வெட்டப் போனார். குறி பார்க்கப்பட்டவர், அனிச்சையாக ஒதுங்க, அந்த அரிவாள் எதிர்பாராதவிதமாக ராமசாமித் தேவரின் கையில் பட்டு, அந்தக் கை கீழே தொங்கியது.

இப்போதும் எதிர்பாராமல் இன்னொன்று நடந்தது.

ராமசாமித் தேவர், ஒரு கையில் அரிவாளைப் பிடுங்கி, என்ன செய்கிறோம் என்பது புரியாமலே, ஒரு வீச்சு வீசிய போது மாயாண்டி நாடார் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அந்த வெள்ளம் கொடுத்த போதையில், ஒவ்வொருவனும் தன்னையும் அடித்துக் கொண்டான்; பிறரையும் அடித்துக் கொண்டான். சரமாரியான அரிவாள் வீச்சுகள், தெய்வ தரிசனத்திற்காகக் கூடிய மனிதனின் மிருகத்தனத்தை அங்கேதான் பார்க்க வேண்டும். முடிவில்...

நான்கு, ஜாதி இந்துப் பெண்கள் கந்தசாமியின் மனைவியைப் போல ஆனார்கள்.

எல்லாம் முடிந்த பின்பு, எங்கிருந்தோ போலீஸ் வந்தது. ஒருசிலரை ஆஸ்பத்திரிக்கும், பலரைப் போலீஸ் நிலையத்திற்கும் கொண்டு போனார்கள்.

இந்த வீரபுலத்தின் ஒராண்டு நிறைவு, விழா இல்லாமலே முடிந்தது. காலம் ஒடியது. கோர்ட்டில் வழக்குகள் நடந்துகொண்டிருந்தாலும், யார் யாரை வெட்டியது என்று நிரூபிக்க முடியாததால், அவை இழுபறி நிலையில் கிடந்தன.

ஒரு கை அடியோடு போன ராமசாமித் தேவர், இன்னொரு கையால் வேட்டியைச் சரி செய்துகொண்டே, குளத்துக்கரையில் நடந்து கொண்டிருந்தார். ஒராண்டு காலத்திற்கு முன், அதே இடத்தில் மாயாண்டி நாடாருடன் பேசிக்கொண்டிருந்த இனிய நட்பின் கசப்பைச் சுவைக்க இப்போ, எதிர்த் திசையில் இருந்து ஒரு கண்போய், தோள்பட்டை சரிந்த மாயாண்டி நாடார் வந்து கொண்டிருந்தார்.