பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலவு காத்த பலவேசம் 15

செல்லக்கணி, கல்யாணப் பந்தலுக்குள்ளே வண்ண வண்ணச் சேலைகளைக் கட்டிய களைப்பில், வெற்றிலையை குதப்பிக் கொண்டு, தன் வீட்டில் சின்னான் மடியில் பட்டும் படாமலும் தலை வைத்திருந்தபோது, பலவேசம், ஆவேசமாக வந்து அலறினார்.

"கடைசில ஒன் புத்திய காட்டிட்டியே மாப்பிள்ள தாத்தாகிட்டே கிளியம்மையை மாதிரி ஒழுக்கமுள்ளவள் பாக்க முடியாதுன்னு சொன்னியாமே? அந்த கிழவன் நீ சொன்னத எல்லார் மத்தியிலும் பட்டுன்னு உடச்சிட்டான். இப்படியாளா அடுத்துக் கெடுக்கது?"

செல்லக்கணி அமைதியாகப் பேசினாள். "நானா அடுத்துக் கெடுக்கப் பார்த்தது, இல்ல நீயா..." "பின்ன எதுக்குளா நான் சொன்னபடி சொல்றேன்னு சொன்னே?"

"நான் அப்படிச் சொல்லாட்டா நீரு வேற யாரயாவது பிடிச்சி அந்த அம்மா கல்யாணத்த கெடுத்திருப்பீரு.'

"வுன்ன கையக்கால ஒடிக்கனா... இல்லியான்னு பாரு" "கிளியம்மை தலக்கிறுக்குல என்னைப் பேசுனது உண்மைதான். அது அகங்காரி என்றதும், உண்மைதான். அதுக்காக நான் பதிலுக்குப் பதிலா பேசலாமே தவிர செய்யலாமா? ஒரு பொண்ணோட வாழ்வ குலைக்கிற அளவுக்கு நான் மோசமானைவ இல்ல. ஏன்னா நான் அழுக்க எடுத்திட்டு சுத்தத்தை குடுக்கிறவ." பலவேசம் புரிந்து கொண்டார். மீசை துடிக்க, உதடுகள் துள்ள, கண்கள் எரிய, அவர்களைக் கோபமாகப் பார்த்து விட்டு வெளியேறினார்.