பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நட்பின் ஆன்மா 25

கொண்டதை பயங்கரமாகக் கண்டனம் செய்திருந்தான். நான் நன்றி கெட்ட துரோகி என்றும், செய்நன்றியை மறந்த படுபாவி என்றும், ஆரம்ப காலத்தில் அவள் மனைவி. என்னைக் காரியவாதி என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்றும், அவள் பேச்சைக் கேளாமல் என்னிடம் அன்பு காட்டியது மடத்தனம் என்றும், அவன் மனைவி உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்றும், அவளை எனக்காக அலட்சியப்படுத்தி பெரிய பாவம் செய்து விட்டதாகவும் புலம்பியிருந்தான். இப்போது என் - ங்கக் கெளிர் பிட்டது என்றும், இனிமேல் என் முகத்தில் விழிக்கப் போவதில்லை என்றும் சபதமிட்டிருந்தான்.

அந்தக் கடிதத்தை நான்கு தடவையாவது படித்திருப்பேன். நான் சென்னைக்கு வந்ததும் பிரிவாற்றாமையால் அவன் 'லோன்லியாக' இருந்திருப்பான் என்பதும், இதற்குக் காரணமான மனைவியிடமிருந்து அன்னியப் பட்டிருப்பான் என்பதும், இப்படித் தனிமைத் துயரில் அவன் வருடக் கணக்கில் தவித்துக் கொண்டிருக்கும்போது கோபாலனும் அவன் மனைவியும் அவன் வீட்டில் குடியேறி இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரிந்தது. 'செக்ஸ்' என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட அல்லது மனக்கிளர்ச்சி சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. தாயன்பு கிட்டாதவர்களும், இளமையில் பலவித தொல்லைகளை அனுபவித்தவர்களும், பிரச்னைகளை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சுபவர்களும், தத்தம் பிரச்னைகளை 'செக்ஸ்' பிரதிபலிப்பாகக் காண்டார்கள் என்று கல்லூரியில், மனோதத்துவப் பாடத்தில் படித்திருக்கிறேன். ஒரு வகையில் பார்த்தால், நானும் அவன் 'திரிபுக்கு' ஒரு காரணம்.

என்னை அவன் 'துரோகி' என்று தூற்றியதற்காக நான் கவலைப்படவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். என்மீது ஏற்பட்ட அன்பினால், மனைவியை வெறுத்தவன், இப்போது என்மீது ஏற்பட்ட வெறுப்பினால், என்னைப் 'பழிவாங்கும்' தோரணையில் சைக்காலஜிப்படி 'காம்பன்ஸேவடின்' செய்து கொள்ளும் வகையில் மனைவியின் மீது அன்பைப் பொழிவான் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படிப்படியாக கோபாலன் மனைவி மீதுள்ள மோகமும் மறைந்துவிடும் என்றும் நம்புகிறேன். ஒரு வேளை இவன் இயலாமையை அறிந்து அவளே ஒதுங்கிக் கொள்ளலாம்.

அவன் நன்மைக்காக, அவன் பார்வையில் நான் 'துரோகியாக' நிரந்தரமாக இருக்க விரும்புகிறேன். அதற்காக, அவன் கடிதத்திற்குப் பதிலாக, அவனை வசைபாடி, கண்டபடி திட்டி ஒரு கடிதம் எழுதலாம் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தங்கச்சியும் தப்பாக எடுத்துக் கொள்வாள். என்ன செய்வது? சில தவறுகளே சில நல்ல காரியங்களுக்குத் தகுதிகளாகின்றன. ஒரு நட்பின் ஆன்மாவிற்காக, அதன் உடம்பைப் பலியிட வேண்டியதாகிறது.