பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடித்தனம் 27

"நான்... கொஞ்சம் தர்றேன்... ஒரு வாரத்துல தந்துடு...” "நீ மகராசியா இருக்கணும்... எதுக்கும் உன் ஆம்புடையான்கிட்ட சொல்லிட்டு தா..."

அஞ்சலை இன்னொருத்தியிடம் பேசினாள். "என்ன... ராமாக்கா. எப்படி இருக்கு உன்னோட பொழப்பு?" மழை காலத்துல பீடிங்க நல்லா விக்கும்... இன்னிக்கு முப்பது வண்டலு சுத்தினேன். இன்னும் இருபது வண்டலு சுத்துனா... அம்பது வண்டல கடையில பூடலாம்... இந்த பாழாப்போற பாவி இன்னும் ஒரு மணி வரைக்கும் லைட் ஆடமாட்டாள்..."

"ஆமா... இன்னும் ஏன் மெயின் போடல... இருட்டிட்டா பூடவேண்டியது தானே..."

"அது மத்த வீட்ல. இந்த வீட்ல... ஆறரை மணிக்கு முன்னால... தலைகீழா நின்னாலும்... மெயின் போடமாட்டாள்...”

"வாங்க எல்லாருமா வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டுப்'பாப்போம்..." "அவ தாடகையாச்சே." " அவ தாடகையானா... நாம சூர்ப்பனகையாயிட்டா பூச்சு." அஞ்சலையுடன் எல்லா பெண்களும் சேர்ந்து சிரித்தார்கள் வீட்டுக்கார அம்மாவிடம் 'லைட்' போடும்படி கேட்பதற்காக, அடிமேல் அடி வைத்து நடந்தார்கள்.

அந்த வீட்டிற்கு, இரண்டு "கனெக்ஷன்கள்", குடித்தனக்காரர்கள் பொந்துகளில் எரியும் மின்சார பல்புகளின் 'குடுமி' (அதாவது மெயின்) வீட்டுக்காரர் வீட்டில் இருந்தது... ஆறரை மணிக்கு முன்னதாக மெயின் விழாது. இரவில் ஒன்பதரை மணிக்கு, யார் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, மெயின் "ஆப்"பாகிடும். இந்த மரபில் ஒரு மாறுதலை ஏற்படுத்துவதற்காக அந்தப் பெண்கள் அஞ்சலையின் தலைமையில் வீட்டுக்கார அம்மாவிடம் தூது போனார்.

வுட்டுக்கார அம்மாவுக்கு, நாற்பது வயதிருக்கும். பால்கனியில் நடக்கமாட்டாமல் நடந்துகொண்டிருந்தாள். கழுத்தில் இருந்த நகைகளைப் பார்த்தால், திருப்பதி வெங்கடேஸ்வரனே பொறாமைப்படுவார்.

அண்ணாந்து பார்த்த அஞ்சலைக் கோஷ்டியை, அவள் அலட்சியமாகப் பார்த்தாள். அவர்களிடம், அவள் பேசுவது கிடையாது. அந்த வீட்டில் சுமாரான பொந்தில் வாழும் மளிகைக் கடை அண்ணாச்சி பொஞ்சாதியுடனும், அதே மாதிரி இன்னொரு பகுதியில் வாழும், 'நர்ஸம்மா' என்று அழைக்கப்படும் ஆயாவுடனுந்தான் அவள் பேசுவாள்.