பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஒரு சத்தியத்தின் அழுகை

பொன்னாத்தா, அந்த ஸ்டெதாஸ்கோப்பை, எமனின் பாசக் கயிறு மாதிரி நினைத்துப் பயத்துடன் ஒரடி பின்வாங்கினாள். பளபளப்பான அந்தக் காரையும், தன் குடிசையையும் மாறி மாறிப் பார்த்தாள். அவள் குடிசையின் கூரையில் மேற்பகுதியில் உள்ள ஒட்டை வழியாக வரும் சூரியன் கதிர் மின்னுவதுபோல், அந்தக்காரின் மேற்பகுதி மின்னிக்கொண்டிருந்தது. சாலையை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காரைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கணவனின் நினைவு வாட்டியதோடு, கண்ணிரும் வந்தது. முன்றானையால் கண்ணைத் துடைத்துக்கொண்டபோது, பரமசிவம் அதட்டினார்.

"ஏய், பொன்னாத்தா, ஒனக்கு நல்ல காலம் பொறந்திடுத்துன்னு சொல்றேன். நீ பாட்டுக்கு அழுதால் எப்படி?"

"அழலே மாமா தூசி விழுந்துட்டுது, கண்ணைத் துடைச்சேன்." "சரி, இவங்கெல்லாம் யார் தெரியுமா? உனக்கு எப்படித் தெரியும்? இவரு சென்னையிலேயே பெரிய மனுஷர். பத்து வீடுங்களும் ரெண்டு கம்பெனியும் இருக்கு. இவரு டாக்டர். ஏழைங்களுக்கு மட்டும் வைத்தியம் செய்யறதைச் சேவையா நினைக்கிற பணக்காரத் தம்பி. இந்த அம்மா வக்கீல்; இவங்க குடும்பமே கோர்ட் குடும்பந்தான்."

பொன்னாத்தா, அந்த அறிமுகத்தை அங்கீகரிப்பவள் போல், லேசாகச் சிரித்துக்கொண்டே நின்ற அந்த இளமங்கையையும், அவள் லிப்ஸ்டிக்கையும், சும்மாட்டுக் கொண்டையையும், நீண்டு வளர்ந்து பாலிஷ் பூசிய நகங்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவள் உடம்பு மின்னிய மினுமினுப்பையும், மிரள மிரளப் பார்த்துக் கொண்டே என்னை வந்து ஏன் இந்த மாமா பாடாய்ப் படுத்துகிறார்? என்று நினைத்துக் கொண்டே நின்றாள். பரமசிவம் விளக்கினார்.

‘'எதுக்குச் சொல்றேன்னா, இப்பேர்ப்பட்ட பெரிய ஆட்கள்; சுவீகாரம் எடுக்க வந்திருக்காங்க, புரியதா?”

பொன்னாத்தாவுக்குப் புரிந்தது. அவள் பையனைத் தத்து எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள். முதலில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிள்ளையார் மாதிரி வயிறு தள்ளிக் கொண்டும், நெஞ்செலும்பு துருத்திக் கொண்டும், விலாவெலும்புகள் புடைத்துக்கொண்டும், குச்சிக் கால் கைகளுடனும், மாந்தம் பிடித்து, இந்த நான்கு வயதிலும் நான்கு கால்களோடு நடக்க வேண்டிய நிலையில் உள்ள தன் ஒரே மகன் முனுசாமியை, அவர்கள் வளர்த்தால் அவனும் பெரிய மனிதனாகி இதேபோல ஒருநாள் காரில் தன்னைப் பார்க்க வருவான் என்று நினைத்து மகிழ்ந்தது தாயுள்ளம். ஆனால் அடுத்த கணம், இருக்கிற ஒரே பிள்ளையையும் கொடுத்துவிட்டு வாழ முடியாது என்று நினைத்தவள்போல் திடுக்கிட்டாள்.