பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொகுசுக்காரர்கள் 61

கொடுக்கலாமா என்று யோசித்தாள் பொன்னாத்தா, பிறகு கண்ணிர் மல்க, அவசர அவசரமாக மகனைக் கோணியில் கிடத்திவிட்டு, மகனின் தொண்டையைத் தடவிவிட்டாள். பொங்கி வந்த கேவலை அடக்கிக் கொண்டாள். அந்தச் சமயத்தில், நாட்டு வைத்தியர் தங்கவேலு, "என்ன பொன்னாத்தா? துண்டுக் கருவாடு வைக்கச் சொன்னேனே, வச்சியா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

பொன்னாத்தாவுக்குக் கண்மண் தெரியாத கோபம். கிழவன், துண்டுக் கருவாடு கேக்கறதுல குறைச்சல் இல்ல. ஆனால் ஒரு வாரமாய் மருந்து கொடுத்தும், இன்னும் பிள்ளைக்குச் சுகமாகல. என்ன மருந்தோ மாயமோ? இந்த லட்சணத்துல கருவாடு, அதுவும் துண்டுக் கருவாடு வேணுமாம். ஆசையைப் பாரு!

"என்ன பொன்னாத்தா, துண்டுக் கருவாடு கிடைக்கலியா?" "பிள்ள கண்டதுண்டமா வெட்டிக்கிட்டு கிடக்கான். ஒமக்குத் துண்டுக் கருவாடு வேணுமாக்கும் கருவாட்டுக்காக மருந்து கொடுக்கிறீரா? இல்ல, மருந்துக்காகக் கருவாடு கேக்கிறீரா? நீரு செய்யறது நல்லா இல்லே தாத்தா."

வைத்தியர், அவளை ஒரு மாதிரி பார்த்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, "பிள்ளய எடு பார்க்கலாம்" என்றார்.

"நான் டாக்டர்கிட்ட குடுக்கப் போறேன்." "மகராஜியாச் செய். உன் இஷ்டம். நான் வரேன்." நாட்டு வைத்தியர், அவளைத் திரும்பிப் பார்க்காமலே போனார். 'இப்படிப் பேசியிருக்கக் கூடாது' என்று பொன்னாத்தாவும் வருந்தினாள். சே சே இருந்தாலும் இந்தக் கிழவனுக்கு இவ்வளவு ஆசை கூடாது. எவ்வளவு பெரிய மனுஷன்! அந்த அம்மா எவ்வளவு பெரிய மகராசி எவ்வளவு அன்பா மருந்து தரேன்னு சொல்றாக, இந்த ஆளு என்னடான்னா, கருவாட்டுக் குழம்பு கேக்கறான்!

இதற்குள், சென்னைச் சங்கக்காரர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும், பொன்னாத்தா தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். டாக்டர் குழந்தையைப் பார்த்தார். ஒரு கார்டினால் மாத்திரையை நுணுக்கிப் பையனின் வாயில் ஊற்றினார். பிறகு, பத்துப் பதினைந்து மாத்திரைகளை எடுத்துப் பொன்னாத்தாவிடம் கொடுத்துவிட்டு, "தினம் மூணு மாத்திரை, வேளைக்கு ஒண்னு கொடு, சரியாயிடும். மீதி மருந்துகளை நாலுநாள் கழிச்சுத் தாரேன். அவனுக்கு முட்டை வாங்கிக் கொடு; ஹார்லிக்ஸ் கொடுக்கனும், ஆப்பிளும் அவசியம்" என்றார்.

இளமங்கை, அவளை ஆதரவோடு பார்த்தாள். "கவலைப்படாதே, சரியாயிடும்."