பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொகுசுக்காரர்கள் 65

பொன்னாத்தாவின் மகனுடைய கைகால்கள், மேலும் அதிகமாக இழுத்தன. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அழுதுகொண்டிருந்த பொன்னாத்தாவின் கண்களில் சிறிது பிரகாசம்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு நாட்டு வைத்தியர் தங்கவேலுவே அங்கு வந்துவிட்டார். பையனின் கையைப் பிடித்து நாடி பார்த்த அவர், "ஐயோ பகவானே! மரணநாடி பேச ஆரம்பிச்சிட்டுதே! இனிமேல் ஒண்ணும் பண்ண முடியாது. காலையிலே என்ன சாப்பிட்டான்?" என்றார்.

"சாக்லேட் தின்னான். வேண்டாண்டான்னா கேட்கலே. அந்தத் தளுக்குக்காரி கொடுத்த அவ்வளவு சாக்லேட்டையும் துண்னான்." "ஒனக்கு அறிவிருக்கா பொன்னாத்தா? இனிப்புப் பண்டங்கள் கொடுக்கக் கூடாதுன்னு நான் ஒனக்குப் படிச்சிப் படிச்சி சொன்னேனே. மறந்துட்டியா? வயித்துல மாந்தம் வந்துட்டுது. அதனாலதான் வெட்டு வந்துட்டுது. நான் கொடுத்த கஸ்தூரி மாத்திரையை வச்சிருக்கியா?"

"தாத்தா, நான் பாவி. மாத்திரைகளைத் துர எறிஞ்சுட்டேன். இப்போ நான்பெத்த மகனையும் எமங்கிட்டே எறிஞ்சுட்டேன். தாத்தா, தாத்தா, போனதடவை அவன் கேக்கைத் தின்னுட்டுத்தான் வெட்டு வந்தது. நான் உம்மை அநியாயமாய்த் திட்டிட்டேன்."

பொன்னாத்தாவின் மகனுக்கு வெட்டு நின்றுவிட்டது. வாழ்க்கையிலிருந்தே அவன் வெட்டிக்கொண்டான்.

பொன்னாத்தா சங்கத்து ஆசாமிகளைத் திட்டியபடி ஒப்பாரி வைத்தாள்.

அவள் திட்டுக்கள் எட்டாத சென்னை நகரில், அந்தச் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. சங்கத்தின் அறையில் பொன்னாத்தா மகனுக்கு, மிஸ் உமா சாக்லேட் கொடுக்கும் போட்டோ சுவரில் மாட்டப்பட்டிருந்தது. பிரபல தலைவர், பொன்னாத்தாவுக்கு மருத்துவ அட்டை அளிப்பதாகக் காட்டும் புகைப் படத்தைப் பிரசுரித்த பிரபல பத்திரிகைகள் அந்த மேஜையில் கிடந்தன. அவற்றைக் கத்தரித்துப் பிரேம் போடப் போகிறார்களாம்! சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி, அடுத்த மாதத்துக்கு எந்தக் கிராமத்தைச் சுவீகாரம் எடுக்கலாம், அதற்கு எந்தத் தலைவரை அழைக்கலாம் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது.