பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாயம் 67

நம் இனஜன பந்துக்கள் எல்லோரும் நல்ல சுகம். இதுபோல் உன் சுகத்தையும், ஐயாசாமி அண்ணாச்சி, அவர் மகன் பெண்டாட்டி சுகத்தையும், கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் ஆசையோடு இருக்கிறேன்.

"மேல்படி, மாடக்கண்ணு அறியும் விஷயம் என்னவென்றால், நான் இனிமேல் உயிர் வாழ்ந்து பிரயோஜனமில்லை. அன்னக்கிளி வயலுக்குப் போயிருக்கும்போது தீவட்டித் தடிப்பய பிள்ளை பெருமாள், காதல் சினிமாப் பாட்டைப் பாடி கிண்டல் பண்ணியிருக்கான். உடனே அன்னக்கிளி, நல்லதங்காள்போல் அழுது புரண்டு என்னை ஏன் கிண்டல் பண்ணுகிறாய் என்று சொன்னதுக்கு, அந்த கழுத களவாணிப் பயமவன் உடனே விசிலடிச்சானாம். சாயங்காலம் நான் கண்டித்துக் கேட்டால், அவனும், அவன் அம்மாக்காரியும், அவளுக்குத் தோப்புக்கரணம் போடும் புருஷன்காரனும் என்னை மிரட்டினார்கள். உன்னையும் திட்டினார்கள். ஆகையால் நீ, இந்தக் கடிதத்தைத் தந்தி போல் பாவித்து, உடனடியாக ஊர் வந்து சேரவும். அன்னக்கிளி அழுது கொண்டே இருக்கிறாள். இவர்களை அடக்கினால்தான் நாம் தெருவில் நடக்கலாம். நீ வருவது வரைக்கும் நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்போம். எப்படியாவது வந்து நம் குலமானத்தைக் காப்பாத்து. உடனே வரவும்.

இப்படிக்கு, உன் அன்புள்ள அம்மா, தர்மம்மாள்." கடிதத்தைப் படித்த மாடக்கண் ணு, கைகளைத் தட்டிக் கொண்டான். தோளில் அடித்துக் கொண்டான். காலால் தரையை உதைத்துக் கொண்டான். வார்த்தைகளைச் சுமந்து நின்ற அவன் வாய், தானாகப் பேசியது:

"பாத்தியரா மாமா... அநியாயத்தை. என் தங்கச்சிய. வயசுப் பொண்ணு என்கிறதையும் பார்க்காம. அந்தப் பெருமாள் பயல் கிண்டல் பண்ணியிருக் கான்... அவன் கையை காலை ஒடிச்சாத்தான் எனக்குக் கைகால் இருக்கிறதா அர்த்தம். மாமா. நான் நியாயஸ்தன். நீரே சொல்லும்."

ஐயாசாமி நிதானமாகப் பதில் அளித்தார்: "மாடக்கண்ணு உனக்கு இப்போ ஒடுற பாம்பைப் பிடிக்கிற வயசு. வாலிப வேகத்துலே பேசுறது தப்பு. மாமா சொல்றதைக் கேளு. ரெண்டு நாளைக்கு ஆறப்போடுவோம். அப்புறம் யோசிப்போம்..."