பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒரு சத்தியத்தின் அழுகை

"அன்புமிகு அருமை மகன் மாடக்கண்ணுவிற்கு,

உன் அன்பு அன்னை, புலவர் பட்டத்திற்குப் படித்தும் வேலை கிடைக்காமல், பிறந்த மண்ணில் நாட்களைப் பயனின்றிக் கழித்துக் கொண்டும் - அதே நேரத்தில் உன் உறுதுணையால் சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் உயிர் வாழும் புலவர் புனிதவதி மூலம் வரையும் மடல். நலம். நலம் காண விழைகின்றேன்.

"மகனே மாடக்கண்ணு உன் அன்பின் கடிதம் கிடைத்தது. நான் எழுதிய சென்ற கடிதத்தில், ஒரு பெரும் பிழை நேர்ந்து விட்டது. வருந்துகிறேன். சென்ற கடிதம், எட்டாவது வகுப்பை மூன்று தடவை முட்டிப் பார்த்துத் தோல்வி கண்ட அசடு முத்துலட்சுமியால் எழுதப்பட்டது என்பதை நீ அறிவாய். அவள், நான் சொன்னதைப் புரியும் பக்குவம் இல்லாது, விவரங்களை மாற்றி எழுதி, பெரும் பாவம் செய்தனள்!

"மகனே, நடந்தது இதுதான்.

உன் அத்தைக்காரி என்று சொல்லப்படுபவளின் மகளான மேனாமினுக்கியும் - உன் அருமைத் தங்கையின் பெயரைக் கொண்டவளுமான அன்னக்கிளி, நம் வயல் வழியாக வரப்பில் ஒயிலாக நடந்துகொண்டே, காதற் பாட்டுக்களைக் கூவிக்கொண்டு, இதர பெண்களுடன் கொட்டமடித்துக் கொண்டே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பேதமைப் பண்புகளை மறந்தவளாய், இழிவான முறையில் கையைக் காலை ஆட்டிக்கொண்டு போயிருக்கிறாள். வயலில் இருந்த உன் இளவலாம் செல்வன் செல்லத்துரை, அவளைத் திருத்த வேண்டும் என்ற துய நோக்கில், பெண்களுக்கு அழகு அடக்கம் என்று அவன் பாட்டுக்குப் பேசியிருக்கிறான். அந்த இரண்டும் இல்லாத அன்னக்கிளி, உடனே சினந்து கொதித்து, உன் இளவலை உன் கண்ணினும் இனிய தம்பியைத் திட்டியிருக்கிறாள். மாலையில் அவள் அன்னையும் தந்தையும் சுற்றம் சூழ நம் இல்லம் வந்து என்னை ஏசினர். பெருமாள், நம் அன்னக்கிளியை - உன் உயிரினும் மேலான இனிய தங்கையை இரண்டு நாட்களுக்குள் நையாண்டி செய்யப் போவதாகச் சபதங் கொண்டுள்ளான். ஆகையால் மகனே! ஓடி வா. உடனே வா! தாய்

சொல்லைத் தட்டாதே தயங்காமல் ஓடி வா!

இவ்வண், உன் ஆருயிர் அன்னை, தர்மம் அம்மையார்."