பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஒரு சத்தியத்தின் அழுகை

செல்லம்மாவிற்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக் கொண்டுவந்தது. கிருஷ்ணாயில் வாங்குவதற்காக வலது கையில் வைத்திருந்த கண்ணாடி சீசாவை இடது கைக்கு மாற்றிக்கொண்டு, கொஞ்சம் சத்தம் போட்டே கிழவியை அதட்டினாள்.

'ஒன்கு எத்தன வாட்டிமே சொல்றது? ஏம்மே வந்தே? எதுக்காவமே வந்தே? நீ உயிரோடயே செத்துப் பூட்டான்னு தலைமுழுவிட்டேன்னு சொன்னதக்கப்புறமும் வந்து நிக்றியே. ஒனக்கு வெட்கமா இல்லமே? கொஞ்சமாவது சூடுசொரண தேவுண்டாவது இருந்தா வர்வியா? உம். ஒன்கு சூடு இருக்குமுன்னு, நானு நினைக்கதே தப்பு. சூடு இருந்தாக்கா இப்டி பூடுவியா போம்மே. இன்னொருவாட்டி, இந்தண்ட பார்த்தமுன்னா மவளே மாயானத்துக்குப் பூடுவே."

செல்லம்மா நகரப் போனாள். கூனிக்குறுகி நின்ற கிழவி, அவளை லேசாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு மீண்டும் திரும்பி நின்றுகொண்டே பேசினாள்.

"ஒன்கு கல்யாணமுன்னு சொன்னாங்கோ. பிள்ளையாண்டான் எப்டிக்கிறான்னு பார்க்கணும்போல தோணிச்சு."

"கல்யாணம் என்கிற வார்த்தய பேச ஒனக்கு இன்னாம்மே யோக்யத கீது? பத்னிங்க பேசவேண்டிய வார்த்தய பலவட்ற முண்ட பேசினா என்னாம்மே அர்த்தம்? சரிதான் போம்மே."

கிழவி, போகாமல் அங்கே நின்றாள். அவளை அனுப்பி விட்டுப் போகலாமா என்று சிறிது யோசித்துக் கொண்டிருந்த செல்லம்மா, காறித் துப்பிவிட்டு, மளிகைக் கடையை நோக்கி நடந்தாள். அவள் போகிறாள் என்பதை உணர்ந்த கிழவி, மீண்டும் உடம்பைத் திருப்பி போகிறவளையே பார்த்துக் கொண்டு நின்றாள். இருபத்தொரு வயதில் வயதுக்கேற்ற வாளிப்போடும், வாளிப்பிற்கேற்ற கம்பீரத்தோடும், கம்பீரத்திற்கேற்ற குரலோடும், குரலுக்கேற்ற முகத்தோடும், முகத்துக்கேற்ற முழுச் ஜ்வாலைக் கண்களோடும் விளங்கும் செல்லம்மாவை பார்த்துக் கொண்டு நின்ற கிழவி, முந்தானிச் சேலையின் முனையை எடுத்து, கண்களை ஒற்றிக்கொண்டாள். பூடுவோமோ என்று நினைத்து பின்னர் 'இன்னொரு வாட்டி பார்த்துட்டுப் பூடலாம் என்று சிந்தனையை பரிசீலித்துக் கொண்டே, கிழவி மின்சாரக் கம்பத்தில் முழுமையாகச் சாய்ந்து கொண்டு நின்றாள்.

பத்துப் பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும்.