பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்

lெசந்தா, மீனாட்சியை அடித்தபோது, அடியோசையும் அடித்தவளின் உறுமலுந்தான் கேட்டதே தவிர, அடிபட்டவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. மீனாட்சி, இரு முழங்கால்களையும் செங்குத்தாக வைத்துக்கொண்டு அவற்றிற்குள் நெருப்புக்கோழி மாதிரி தலையைப் புதைத்துக் கொண்டு இருந்ததால், வசந்தாவிற்கு அவளை அடிப்பது எளிதாக இருந்தது.

உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தந்தை சாமிநாதன் எச்சிற் கையோடு ஏய் நிறுத்து. நிறுத்து என்று கத்திக்கொண்டே துள்ளியோடி வந்தார். மகளைக் கோபமாகப் பற்றி வேகமாக இழுத்தார்.

"பல்லை ஒடச்சிடுவேன்... கழுதை... அவள் னா ஒங்க எல்லாருக்குமே இளக்காரம். அத்தை என்கிற மரியாதை கூட நீ கொடுக்கவேண்டாம். வயசில பெரியவள் என்கிற அனுதாபமாவது வேண்டாமா... கழுதை'

வசந்தா சீறினாள்: "அவள் எதுக்கு என் பேனாவை எடுத்துப் பல் குத்தனும்? நிப்பு உடைஞ்சு போச்சு. இன்னைக்கு டெஸ்டு... தடிச்சி. ராட்சலி... பேய்... மடச்சி. அறிவுகெட்ட பரம்பரை..."

சாமிநாதன், கடைசி வார்த்தையைக் கேட்டதும் எச்சிற் கையோடு மகளை ஓங்கி அடித்தார். அப்படி அடிக்கும் போது, கையில் ஒட்டிக்கொண்டிருந்த பருக்கை மீனாட்சியின் தலையில் போய் அமர்ந்தது.

வசந்தாவின் அக்கா விமலா மீனாட்சியின் அருகில் போய், அந்தப் பருக்கையை எடுத்துவிட்டு, அவள் தலையைக் கோதிவிட்டாள். அவளிடம் இவள் அவ்வளவு அனுதாபம் கொண்டிருக்கிறாளாம்! இவள்தான், சற்று நேரத்திற்கு முன்பு தங்கையிடம், "பாருடி. உன் பேனா நிப்பு வச்சு... அத்தை பல் குத்தறா!' என்று தூண்டிவிட்டவள். இப்போது அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும் தன் குட்டு அம்பலமாகாமல் இருப்பதற்காக, அத்தைக்காரியிடம் அனுதாபம் கொண்டவள்போலும் தங்கையின் வன்முறையை அங்கீகரிக்காதவள் போலும் பாவலா செய்தாள்.