பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஒரு சத்தியத்தின் அழுகை

அன்று

சாமிநாதன் கேம்ப் போய்விட்டார். மனைவிக்காரி, சங்கருடன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தாள். வசந்தாவின் பள்ளிக்கூடத்தில் ஏதோ விழா...

சாயந்தரம் ஆறு மணி இருக்கும். விளக்கு ஏனோ எரியாமல் இருந்தது. மீனாட்சி, வழக்கமான இடத்தில், வழக்கமான முறையில் உட்கார்ந்திருந்தாள்.

சாத்தியிருந்த வாசற் கதவைத் திறந்துகொண்டு, கல்லூரிக்காரி விமலா வந்தாள். அவள் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே, ஒரு வாலிபன் அவளுடன் வந்தான். அவன் அவளை விட இரண்டு கிளாஸ் அதிகமாகப் படிப்பவனாக இருக்கவேண்டும். அல்லது அஸிஸ்டெண்ட் புரொபஸராக இருக்க வேண்டும்.

"சும்மா... வாங்க... ஏன் நடுங்குறீங்க...? நான் சொன்னேனே... அது இவள்தான். என் அத்தை. ஆபத்தில்லாத பயித்தியம்." என்று சொல்லிக்கொண்டே விமலா அந்த வாலிபனின் கைகளைப் பிடித்தாள்.

இருவரும் உள்ளறைக்குள் போனார்கள். பயத்துடன் சிரிக்கும் சப்தம் கேட்டது. வளையலோசை கேட்டது. எனக்குப் பயமா இருக்கு என்ற பல்லவியை மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஏதோ சத்தம். கையில் ஒரு பெட்ரும் விளக்குடன் - மீனாட்சி கோர சொரூபமாக நின்று கொண்டிருந்தாள். குபிரென விளக்கை எறிந்துவிட்டுப் பாய்ந்து உள்ளே வந்தாள். விமலாவைக் கட்டிலில் இருந்து தூக்கி நிறுத்திக் கன்னத்திலும் பிடரியிலுமாக மாறி மாறி அடித்தாள். அந்த வாலிபன் மீனாட்சியின் கைகளைப் பிடித்துத் தடுக்கப்போனான். அவ்வளவுதான்

மீனாட்சி அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, மூக்கிலேயே குத்தினாள். ஓங்கி ஒரு அறை கொடுத்து, வாசலுக்கு வெளியே தள்ளிவிட்டு உள்ளே வந்தாள்.

விமலா ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தாள். மீனாட்சி, அவள் அருகில் வந்தாள். விமலாவின் கண்களைத் துடைத்தாள். அப்போது அவள் கண்களில் ஒருவித ஒளி மின்னியது. கருணை படமெடுத்தது.

ஒரே ஒரு வினாடிதான். மீனாட்சி மீண்டும் வழக்கமாக உட்காரும் இடத்தில், முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.