பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஏதாவது ஒரு பொருளைத் தொட்டுவிட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்று முதலிலேயே தீர்மானித்துக் கூறி விட வேண்டும். அதாவது, மரம், செடி, கல் அல்லது சுவர் என்று ஏதாவது ஒன்றை தொடுபொருளாக குறிப்பிடலாம்.

ஆட்டக்காரர்களில் ஒருவரை விரட்டித் தொடுபவர்(it) என்பதாக நியமித்துக் கொள்ளவேண்டும். அதற்குப் பிறகு ஆட்டக்காரர்கள் அனைவரும், மைதானம் முழுவதுமாக நிறைந்து நிற்கலாம்.

ஆடலாம் என்ற ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, ஆங்காங்கே நிற்கும் குழந்தைகளை, விரட்டித் தொடுபவர் ஒடித் தொட முயல்வார். அவர்களும் தங்களைத் தொட்டுவிடாதவாறு தப்பித்துக் கொண்டு ஓடவேண்டும். தான் தப்பிக்க முடியாது என்ற நிலை வருகிறபோது ஓடவும் முடியாது என்பதை உணருகிறபோது, முன்னரே, குறிப்பிட்டிருந்த ஒரு பொருளைத் தொட்டுக்காண்டு நின்றால், விரட்டித் தொடுபவர் தொடாமல் விட்டு விடுவார். ஓடுபவரும் தப்பித்துக் கொண்டு விடுவார்.

தப்பித்துக் கொண்டு ஓடமுடியாமலும் அல்லது குறிப்பிட்டிருந்த பொருளைத் தொட முடியாமலும் போய், ஒருவர் விரட்டுபவரிடம் சிக்கிக் கொண்டால், அவர் அடுத்த விரட்டுபவராக மாற, ஆட்டம் தொடரும்.

இது ஒரு ஓடித் தொடும் ஆட்டமாகும்.


2. ஓடித் தொடு!

(Ordinary Tag)

பயன்படும் இடம்: ஆடுகளம் முழுவதையும் பயன்படுத்தலாம். ஆனால், ஆடும் எல்லையை முன் கூட்டியே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.