பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. மருதநாயகம் ✤ 9

சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், சிவவாக்கியம், தேவாரம், பெருந்திரட்டு, சிறுதிரட்டு, பெருங் குறவஞ்சி, சிறு குறவஞ்சி, ஏரெழுபது போன்ற இலக்கியங்களையும் திருக்குறள், நாலடி, திரிகடுகம், அறநெறிச் சாரம், நல்வழி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதி வெண்பா, மூதுரை போன்ற அறநூல்களையும் பட்டினத்தார், பத்திரகிரியார், தாயுமானவர், மச்சமுனி, இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற துறவியரின் பாடல்களையும் ஞானத்திரட்டு, ஞான போதம், ஞானவாசிட்டம், பதஞ்சலியார் ஞானம், சொரூப சாரம், தருக்கக் கெளமுகி, சிவயோக சாரம் போன்ற சமய நூல்களையும் அரிச்சந்திர புராணம், வாதவூர் புராணம் போன்ற புராணங்களையும் அவர் பயின்றிருந்தார். அவர் கற்றிருந்த நூல்களின் பட்டியல் மலைப்பூட்டுவது. இருக்கு வேதத்திலிருந்தும் பிரஹதாரண்யக உபநிஷதத்திலிருந்தும் பதஞ்சலியார் ஞானத்திலிருந்தும், அகத்தியர் பரிபாஷையிலிருந்தும் மேரு மந்திர புராணத்திலிருந்தும் அறப்பளீச்சுர சதகத்திலிருந்தும் எட்வின் ஆர்னால்டு எழுதிய ‘ஆசியாவின் ஒளி’ (Light of Asia)யிலிருந்தும் அவரால் வேண்டிய இடத்தெல்லாம் மேற்கோள்கள் தர முடிகிறது.

அயோத்திதாசர் வகுத்துக் கொண்ட மேல் வருணத்தாருக்கெதிரான போராட்ட வியூகத்திற்கு அவர் பெற்ற அளவற்ற கல்வி தேவைப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தனிமனிதராக நின்று அவர் நடத்திய போரட்டம் அது. பலமுனைகளிலிருந்து பலரின் தாக்குதலுக்கு ஆளான ஆதி திராவிடர்களுக்காக அவர் தனியராகவே போர்க்கொடி உயர்த்தினார்.அவர்களின் பகைவர்கள் யார் என்பதிலும் அவர்களுக்கெதிரான போர் எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டுமென்பதிலும் அவர் முடிவுகள் தெளிவானவை.

நம்மை நெடு நாளாக ஏமாற்றி வருகிற பிராமணக் கொள்கை மிகத் தந்திரமானது. அதன் லக்ஷணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந்தியா என்னும் பெரிய மரமாகும். அம்மரத்திற்குக் கடவுள், மதம், வேதம், ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளை நடுவில் இந்து என்னும் கூடு கட்டியுள்ளது. அக்கூட்டில் மும்மூர்த்தி மதம் என்னும் கல்முட்டை இட்டு, அதைப் பார்ப்பார் என்னும் கழுகு அடை காத்துள்ளது. தனது கல்முட்டையைப் பொன் முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும், காதாற் கேட்டும், மனத்தில் உணர்ந்தும் கவலையற்றிருக்கிறோம். ஆராய்ச்சி என்னும் கல்லெறிந்து கழுகைத் துரத்தாமலும் சுயசமதர்மம் என்னும் வாள் கொண்டு மரத்தை வெட்டிக் கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும்