பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 107

யென்மனா அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்கு மென சொல்லே” என்பது கொண்டு மானிடன் எனப்பிறந்தும் தன்னைத்தான் அறிய முயன்றும் ஒழுக்கம் குன்றுமாயின் கெடுவான் என்பது விரிவு (அலாய்சியஸ் II 622).

என்று விளக்கம் தருவார். ‘பார்ப்பான்’ என்பவன் தன்னை ஆராய்ந்தறிவோன் என்று தாசர் கூறுவது நம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய கருத்தாகும்.

“அழுக்காறாமை” எனும் அதிகாரத்திற்குப் பொருள் உரைக்கும் தாசர் முதலில் அழுக்காறு எனும் சொல் வஞ்சினம், பொறாமை, குடிகெடுப்பு, லோபம், சூது, பேரவா ஆகிய மனக்களங்குகள் ஆறினையும் குறிக்கும் என்பார்.

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்

எனும் குறளுக்கு அவர் தரும் விளக்கம் பரிமேலழகர் தரும் விளக்கத்தினின்றும் மாறுபட்டது. “ஆறழுக்குடையோனைப் பாவித்து மற்றவனும் நடப்பானாயின் அவனுக்குள்ள செல்வமும் மடிவதுடன் கொடிய துன்பத்திற்கும் கொண்டுபோய்விடும்” என்று பொழிப்புரைத்து “நல்லொழுக்கத்தில் வாழ்ந்திருந்த ஒருவன் தீயொழுக்கம் உடையோனைப் பார்த்து அவன் போல் நடப்பானாயின் அவன் செல்வம் நசிந்து போவதுடன் அவனை மீளாத் துன்பத்திலும் அழுத்திவிடும்” என்று விளக்குவார் (அலாய்சியஸ் II 675).

நன்கு அறியப்பெற்ற சில குறள்களுக்கு அவர் தரும் விளக்கங்கள் ஏற்புடையன என்று கொள்ளல் இயலாது.

ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு (265)

எனும் எளிதில் பொருள் அறியக்கூடிய குறளுக்கு,

தேசத்துள் நீர்வளம் பொருந்தியபோது உலகமென்னும் சிறப்பைப் பெறும் (அவை போல்) விவேக மிகுதியால் ஒப்புரவொழுகுவோன் செல்வன் என்னும் சிறப்பைப் பெறுவான்.

என்று புதுப்பொருள் தருவார். பரிமேலழகர் கூறும் உரை பொருத்தமுடையதாக இருக்க, அயோத்திதாசர் ஏன் இவ்வாறு “ஊருணி” என்பதற்கு “ஊரினுள்” என்றும் “உலகவாம்” என்பதற்கு “உலகமென்னும் சிறப்பைப் பெறும்” என்னும் பொருள் உரைக்க வேண்டும் என்பது புலனாகவில்லை.