பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

சஞ்சீவியை அக்கல்முட்டை மேல் பிரயோகித்து முட்டையை உடைத்து உண்மை அறிதற்கன்றி, மவுனம் சாதித்துச் சாகின்றோம். இவ்வித ஞாய விரிவை எடுத்துரைக்கும் பவுத்தர்களை நிந்திப்பதல்லாமல் சிந்திப்பதில்லை. பிராமணர் அல்லாதவர்களால் எழுதப்பட்டுள்ள பிராமணத்துவத்தைத்தான் “யதார்த்த பிராமண வேதாந்த” விவரமென்று நாம் சொல்கின்றோம். பிராமண மதத்தார்களே எழுதி வைத்துள்ள பிராமணத்துவத்தை, “வேஷ பிராமண வேதாந்த” விவரமென்று இழிவுபடுத்துகிறோம். (பண்டிதர் | 82)

வேறோரிடத்தில் “பறையர் அவர் பார்ப்பார் இவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற புத்த தர்மமான சுயமரியாதையை எல்லாரும் மடை திறந்து இன்புற்று வாழ எல்லார்க்கும் சொல்வது நல்லார் கருத்தாம்” (பண்டிதர் | 134) என்று தம் நோக்கை மறைமுகமாகச் சுட்டுவார்.

தாம் மேற்கொண்ட வாழ்நாள் போரில் அவர் எந்நாளும் எங்கும் வன்முறையைப் பரிந்துரைக்கவில்லை. உட்பகைவரானாலும் புறப் பகைவரானாலும் உடல் அளவில் ஊறு செய்ய வேண்டும் என்பது அவருக்கு ஏற்புடையதன்று. அறிவு நிலையில் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் அறிவு நிலையில் எதிர்வினை செய்ய வேண்டும் என்பதும் அவர் முடிவு. அவர்கள் செய்து வரும் கொடுமைகளை “இத்தேசத்துடன் நூதனமாகக் குடியேறியுள்ளப் பராய சாதியோர்களில் பறையர் பறையர் என்று அழைக்கும் படியானவர்களோ பெரும்பாலும் பயிரிடும் வேளாளத் தொழிலாளருமாய் இருப்பார்களன்றி வேறு மிலேச்சத் தொழில் கிடையாது. இத்தகைய சுத்த தேகிகளைக் கிராமங்களில் சுத்தசலம் மொண்டு குடிக்க விடாமலும் அம்பட்டர்களைச் சவரம் செய்ய விடாமலும் வண்ணார்களை வஸ்திரம் எடுக்க விடாமலும் தடுத்து இவர்கள் சுகத்தைக் கெடுப்பதுமல்லாமல் இவர்கள் உத்தியோகத்திற்குச் செல்லுமிடங்களிலும் சத்துருக்களாயிருந்து கெடுத்து வருவதையும் (அலாய்சியஸ் | 4, 6) உணர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பல கட்டுரைகளிலும் எடுத்துரைப்பார். ஆனால் பகை கொண்டவர்களைப் பகையால் வெல்லலாகாது, சாந்தத்தால் வெல்லலாமென்றும், பொறாமை கொண்டவர்களைப் பொறாமையால் வெல்லலாகாது அன்பால் வெல்லலாமென்றும், புத்தபிரான் போதித்துள்ளாரென்று அவ்வப்பொழுது அவர் நினைவுபடுத்தக் காணலாம். தென்னிந்தியாவில் பறையர் என்று தாழ்த்தப்பட்ட பழங்குடிகள் ஒரு காலத்தில் உயர்வர் என்பது திண்ணம் என்ற நம்பிக்கை கொண்டிருந்த அயோத்திதாசர் அவ்வாறு உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாம் தாழ்த்தி நிலை குலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தித் துன்பம் செய்யார் என்று