பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சிரமயிர் கழித்தலும் சிரமயிர் வளத்தலும் வேண்டுமென்பது இல்லாமல் போம்” என்றும் “சங்கம் சேர்ந்த சிரமணன் மரண ஜெயம் அடையும் வரையில் சிரமயிர் கழித்தே வரவேண்டும் என்பது பூர்வவிதியாதலின் உலகோர் இறந்தானென்று இழிமொழி கூறாது சிறந்தானென்று மரண ஜெயம் அடைவானாயின் மயிர் கழித்தலும் நீட்டலும் வேண்டாமற்போம்” என்றும் விளக்குவார் (அலாய்சியஸ் II 708).

அஞ்சுவ தோரு மறனே யொருவனை

வஞ்சிப்ப தோரு மவா

எனும் குறளுக்கு “யாதாம் ஒருவனைக் கெடுக்க முயல்வதே ஆசையின் மூலம் எனப்படும். அவற்றிற்குப் பயந்து நடத்தலே புத்தரது தன்மமாம்” என்பது தாசர்தரும் விளக்கம் (அலாய்சியஸ் II 714).

“அருளுடைமை” எனும் அதிகாரத்து முதற்குறளுக்கு உரையெழுதும் போது அவர் தரும் செய்தி அதிர்ச்சியூட்டுவது.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்

ஆரியார் கண்ணும் உள

எனப்பாடம் கொண்டு “கிருபையை நிரப்பும் சீரே சீரினும் சீர் எனப்படும். தனதானியச் சீரோ மிலேச்சரிடத்தும் உண்டு” என்று பொருள் உரைத்து “ஆரியார்” என்ற சொல் “பூரியார்” என்று யாரால் எப்பொழுது மாற்றப்பட்டதென்பது பற்றிக் கீழ்கண்ட தகவலை அளிப்பார்.

இவற்றுள் இத்திரிக்குறள் மூலத்தையும் நாலடி நானுறையும் ஜார்ஜ் ஆரங்டியன்துரை பட்ளர் கந்தப்பன் என்பவரால் கொண்டுபோய், தமிழ்ச் சங்கத்து அதிபதி மேம்பட்ட எலீஸ் துரையவர்களிடம் ஏட்டுப்பிரதியாகக் கொடுத்து அச்சிட்டு வெளிவந்த போது ஓலைப்பிரதிக்கு மாறுதலாக சாற்றுக் கவிகளில் சில அதிகரித்தும் அறத்துப்பாலில் உள்ள சில செய்யுட்களைப் பொருட்பாலில் சேர்த்தும், இச் செய்யுளில் ஆரியார் என்று வந்த மொழியைப் பூரியாரென்றும் மற்றும் செய்யுட்களை மாற்றியுள்ளதைக் கந்தப்பனவர்கள் சங்கத்திற்கு எழுதிக்கேட்டபோது மறுமொழி கிடைக்காமல் போய் விட்டது என்பது விவேகிகளறிந்த விடயங்களாம். அம்மொழி சங்கை அவ்வகையாயினும் முன்கலை திவாகரத்தில் “மிலேச்சர் ஆரியர் என்றே” குறிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குச் சார்பாய், பாகுபலி நாயனார் பின்கலை நிகண்டு ஏட்டுப்பிரதியிலும் மார்க்கலிங்க பண்டாரம் பின்கலை நிகண்டு ஏட்டுப் பிரதியிலும் “ஆரியர் மிலேச்சர் கீழோர்” என்றும் “மன்னும் ஆரியரும்