பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

உருதரித்த நாடி தன்னில் ஓடுகின்ற வாயுவை

கருத்தினால் இருத்தியே கபால மேற்ற வல்லிரேல்

விருத்தர்களும் பாலராவர் மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த நாதன் ஆணை அம்மை ஆணை உண்மையே

(அலாய்சியஸ் I 552)

என்னும் பாடலையும், “தெய்வகதி அடைய வேண்டியவர்கள் அண்டர்கோன் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டுமென்”பதற்குப்

பேசுவானும் ஈசனும் பிரம்மஞானம் உம்முளே

ஆசையான ஐவரும் அலைந்தலைச்சல் படுகிறார்

ஆசையான ஐவரை அடக்கி ஓரிடத்திலே

பேசிடாதிருப்பிரேல் ஈசன் வந்து பேசுமே

(அலாய்சியஸ் I 578)

என்ற பாடலையும்,“ஆதியட்சரமாம் அகாரமே அறிவின் விருத்திக்குக் காரணமாகி உகாரமாம் உண்மை ஒளி கண்டு மகாரமாம் காமவெளி மயக்கங்கள் அற்றுச் சிகாரமாம் அன்பில் நிலைப்பதே நிருவாண சுகமாகும்” என்பதற்கு,

அகார காரணத்துளே அநேக னேக ரூபமாய்

உகார காரணத்துளே ஒளி தரித்து நின்றனன்

மகார காரணத்தின் மயக்கமற்று வீடதாம்

சிகார காரணத்துளே தெளிந்தே சிவாயமே

(அலாய்சியஸ் II 468)

என்ற பாடலையும் சான்றுகளாகத் தருவார்.

சிவவாக்கியர் சைவ சமயத்தையோ, வைணவ சமயத்தையோ சார்ந்தவர் என்ற கருத்து அவருக்கு உடன் பாடானதன்று.

ஒளவையார் பற்றி வழங்கி வரும் கதைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளும் அயோத்திதாசர் அவரைப் புத்த அறத்தின் தலையாய சாட்சியாளர்களில் ஒருவராகக் காட்டும் வாழ்க்கை வரலாறு எழுதியதுடன் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை எனும் பெயர்களில் தமிழகம் அறிந்துள்ள அறநூல்களுக்குப் புத்த நெறி நின்று விளக்கமளித்துள்ளார். அவற்றைத் “திரிவாசகம்” என்று அழைத்து புத்தரின் மும்மொழிகளும் அவற்றைத் தழுவிய நான்கு வேத வாக்கியங்களும் முதல் நூலென்றும் வள்ளுவரின் “திரிக்குறள்” வழி நூலென்றும் ஒளவை தந்த அறநூல் சார்பு நூலென்றும் வலியுறுத்துவார்.