பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

கொடியோர் செயல் அறவே” என்று அவர் மக்களைத் தூண்டவில்லை; அவர்களுக்கு எதிராகக் கொடுஞ்சொற்களையும் சொல்லவில்லை.

சென்னை மகாசபையாரின் கூட்டம் ஒன்றில் அவைத் தலைவரிடம் அயோத்திதாசர் “ஐயா, உலகத்திலுள்ள சகல சாதியோருக்கும் தெய்வம் பொதுவென்றும்,கோவில் பொதுவென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோவில்களுக்குள்ளும் சைவ மதத்தோரைச் சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படிச் சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடைய மாட்டார்களா, மதங்களும் பிரபலமடையாதா” என்று பணிவுடன் விண்ணப்பித்தபோது “எல்லோரும் ஏகமாய் நின்று அப்படியே கோவிலுக்குள் சேர்க்கப்படாதென்று கூச்சலிடுங்கால் தஞ்சாவூர்ப் பிரதிநிதி மஅஅஸ்ரீ. சிவராம சாஸ்திரியவர்கள் எழுந்து உங்கள் குலத்தோருக்கு மதுரைவீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும் விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார்.” அயோத்திதாசர் அச்சொற்களைப் பொறுமையோடு கேட்டிருந்து, சினமும் அச்சமும் இன்றி, “ஐயா, அங்கனமிருக்குமாயின், உங்கள் சுவாமிகள் எமக்கு வேண்டாம். இக்குலத்துச் சிறுவர்களுக்குக் கிராமங்கள்தோறும் கல்விச் சாலைகள் வைத்து நான்காவது வகுப்பு வரையில் இலவசமான கல்வி கற்பிப்பதற்கும் இக்குலத்துக் கிராமவாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று கருணை தங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவி கூறு (ரெக்கமண்டு) பத்திரமேனும் கொடுக்கலாகாதோ என்று வேண்டினார் (அலாய்சியஸ் | 80-81).

தமிழ்ப் பழங்குடிகள் புத்த தர்மத்தைக் கடைப்பிடிக்க அதற்கு எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நாளும் அறவுரை கூறிய அயோத்திதாசர் அவர்கள் பகைவர்களுக்கெதிராக எது நேரினும் வன்முறையில் ஈடுபடக் கூடாதென்றும் கடுமையாகப் பேசக் கூடாதென்றும் தீங்கு நினைக்கக்கூடாதென்றும் பகைவர்களை அன்பினாலும் பொறுமையாலும் வெல்ல வேண்டுமென்றும் எடுத்துரைத்து அவர்கள் செய்துள்ள கேடுகளையும் மோசடிகளையும் முறையாக வெளிப்படுத்த அவர்கள் வெற்றிக்குக் காரணமான அவர்கள் எழுதி வைத்துக் கொண்டுள்ள வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பழங்கதைகள், பொய்வரலாறுகள் ஆகியவற்றைக் கட்டுடைப்புச் செய்வதைத் தமது முதல் பணியாக மேற்கொண்டார்.