பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


இப்பாடலை “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்னும் தொடருக்குப் பொருள் கூறும்போது தாசர் பயன்படுத்துவார்.

அவன் செய்த கன்மத்தை அவனே அனுபவித்துத் தீரல் வேண்டும்; பல சீவர்கள் செய்யும் குற்றங்கள் யாவற்றிற்கும் ஒருவன் காரணன் என்று கூறுவது ஒவ்வாத மொழியாகும். அவன் செயல் நற்செயலாயின் நற்பலன் அடைவான். துற்செயலாயின் துற்பலனடைவான். அவ்விரு வினைப் பயனுடன் ஓரணுவேனும் அகற்றலாகாது.

இப்பொருளை வலியுறுத்தும்போது “தானான தன் மயமே யல்லால்” என்று தாயுமானவர் வேறோரிடத்தில் கூறியுள்ளதையும் மேற்கோள் காட்டி “தனக்கு அன்னிய வேறு மயமில்லை” என்பதே முடிந்த முடியென்பார் (அயோத்திதாசர் II 115).

ததாகதர் ஒரு முறை அன்பர்களை அழைத்துத் தாமரை மலர்களையும் தாமரைக் கொட்டைகளையும் கொண்டு வரச் செய்து அவற்றைப் பூமியில் பரப்பி அவற்றின் மேல் அமர்ந்து “தாமரை நீரிலிருந்தும் நீர் ஒட்டாமல் இருப்பது போல் நான் உங்களுடன் கலந்திருந்தும் பற்றற்று இருக்கிறேன்” என்று அறிவுறுத்தியதால் அன்று முதல் தாமரைக் கொட்டைக்குக் குருமணி என்றும் தாமரை மலருக்குத் தாமரையென்றும் பெயர் உண்டாயிற்று என்று ஒரு தொன்மத்தைக் கட்டமைக்கும் தாசர்,

செங்கமல பீடமேல் கல்லால டிக்குள்வளர்

சித்தாந்த முத்தி முதலே

குருமணி இழைத்திட்ட சிம்மாதனத்தின் மிசை

கொலு வீற்றிருக்கு நின்னை

எனும் தாயுமானவர் கூற்றில் போற்றப்படுவது புத்தரே எனச் சுட்டுவார் (அலாய்சியஸ் II 224).

தாசரின் கட்டுரைகளில் “நிகள பந்தக் கட்டறுப் பாரே” எனும் தாயுமானவரின் அடியும் ஒரு முறைக்கு மேல் மேற்கோளாக வரக் காணலாம். பர்மாவைச் சேர்ந்த பெளத்த குரு ஒருவரின் இறப்பிற்குப் பின் அவரது கால் பெருவிரல் கட்டப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு,

“பெளத்த குருக்களில் சமணநிலையில் உள்ளவர்கள் பிணி மூப்பை வெல்லாதவர்கள்; அரகத்து நிலையடைந்தவர்கள் பிணி, மூப்பை வென்றவர்கள்; பெருவிரலைக் கட்டுவது நமது நாட்டிலும் உண்டு. பர்மாவிலும் உண்டு, அவ்வாறு கட்டுதற்குக் காரணம் உலக பாச பந்தக் கட்டு விடவில்லையென்பதைக் குறிக்கவே இதனால் தான் தாயுமானவர் பதிகள பந்தக் கட்டு அவிழ்ப்பாரே” என்றுரைப்பார் (அலாய்சியஸ் III 75)

என்பது தாசர் அளிக்கும் விடை.