பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 143


பிறன்மனை நயந்த கயவர்களெல்லாம் பெரியவர்களாகப் பேசப்படும் கதைகள் கண்டிக்கப் பெறாமல் பின்பற்றப்படவேண்டிய சான்றுகளாகத் தரப்படுகின்றன.

வால்மீகி இராமாயணத்தில் அனுமன் இலங்கையில் புத்த விஹாரத்தைப் பார்த்தது குறிப்பிடப்பட்டிருந்ததாலும், வேறு சில குறிப்புகளாலும் இராமன் புத்தருக்கு முன் வாழ்ந்தவன் என்பதெல்லாம் வெறும் கற்பனையென்று அயோத்திதாசர் சுட்டுவார். ஆனால் இராமாயணப் பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் புத்த சரிதத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.

சந்தகன் சித்தார்த்தரிடம் “இராமனைக் காட்டில் விட்டுவிட்டு நகருக்குத் திரும்பிய சுமந்தரனைப்போல் நான் உம்மை இங்கே விட்டுவிட்டு ஊர் திரும்பமாட்டேன்” என்று சொல்கிறான் (சரிதம் 85).

“சித்தார்த்தர் இல்லாமல் சந்தகன் மட்டும் திரும்பியதைக் கண்ட ஊர் மக்கள் தசரதனின் மைந்தனில்லாமல் அவனது தேர் திரும்பியதைக் கண்டவர்கள் போல் வருந்தி அழுதனர்” (சரிதம் 105).

“அவனுடைய அறிவுடைய மைந்தனாகிய இராமன் காட்டுக்கேகியவுடன் கண்ணீர் வடிக்கும் துயர வாழ்வை மேற்கொள்ளாமல் தசரதன் விண்ணுலகம் சென்றானாதலால் அவன் நான் பொறாமை கொள்ளுதற்கு உரியவன்” என்று சுத்தோதனன் வருந்தினான் (சரிதம் 121).

புத்தரைக் காட்டில் பார்க்கச் சென்ற புரோகிதனும் அமைச்சனும் இராமனைக் காட்டில் பார்க்கச் சென்ற ஊர்வசியின் மகனையும் வாமதேவரையும் போன்றிருந்தார்கள் (சரிதம் 124).

அயோத்திதாசர் புத்தருடைய மொழிகளே வேதங்களென்றும் புத்தரே ஐம்புலன்களையும் வென்றமையால் ஐந்திரர் என்றும் இந்திரர் என்றும் அழைக்கப்பட்டார் என்றும் கூறுவார். புத்தசரிதம் வேதங்களில் குறிக்கப்படும் விண்ணுலக இந்திரனைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் அடிக்கடி பேசுகிறது. தாசர் சமண, பெளத்த அரகத்துகளே பிராமணர்களென்றும் அந்தணர்களென்றும் அழைக்கப்பட்டார்கள் என்றும் பின்னால் தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டவர்கள் வேடதாரிகளே என்றும் எடுத்துரைப்பார். புத்தசரிதத்தில் அவர்கள் பெருமையாகப் பேசப்படும் இடங்கள் பல. அவைகளெல்லாம் அசுவகோசருக்குப் பின்னால் வந்தவர்கள் செய்த இடைச் செருகல்களாக இருக்கலாம்.


குழந்தை சித்தார்த்தன் கந்தனோடு ஒப்பிடப்பெறுதலையும் காணலாம். தவ வலிமையால் புத்தரின் பிறப்புபற்றி அறிந்த அசிதன்