பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 147


தேரோட்டியைக் கேட்க, தேவர்கள் தேரோட்டி தன்னையறியாமல் உண்மையைச் சொல்லுமாறு அவனது உணர்வை மயக்கி விடுகிறார்கள் (சரிதம் 37).

இரண்டாம் முறை மன்னனின் அனுமதியுடன் இளவரசன் வெளியில் செல்லும்போதும் “அதே தேவர்கள்” பிணியால் பீடிக்கப்பட்ட உடலை உடைய மனிதனைப் படைக்கிறார்கள். அவனைப் பார்த்து மனம் வருந்தும் இளவரசன் அதுபற்றித் தேரோட்டியைக் கேட்கத் தேரோட்டி மக்களை நலியச் செய்யும் நோய் பற்றி அவனுக்கு விளக்குகிறான் (சரிதம் 39).

தேரோட்டியையும் தேரையும் மன்னன் மாற்றிவிட்டு மூன்றாம் முறை இளவரசன் வெளியே செல்ல அனுமதிக்கிறான். இம்முறையும் “அதே தேவர்கள்” ஒரு பிணம் தூக்கிச் செல்லப்படும் காட்சியை இளவரசனும் தேரோட்டியும் மட்டும் காணுமாறு படைக்கிறார்கள். அதுபற்றித் தேரோட்டியை இளவரசன் வினவ அவன் எந்த உண்மையைச் சொல்லக்கூடாதோ அந்த உண்மையைச் சொல்லுமாறு அவனது உணர்வை மயக்கி விடுகிறார்கள் (சரிதம் 41).

இளவரசனுடைய மாளிகையில் அழகிய இளம் பெண்கள் நிறைந்திருந்து இசைக்கருவிகளை மீட்டி அவனுக்குக் களிப்பூட்ட முயல்கிறார்கள். ஆனால் “சுந்தாவாசத்தேவர்களின் ஐந்து வகைகளில் மிகவுயர்ந்தவர்களான அகனிஷ்தர்கள்” அவனது திடமனத்தைக் கண்டு அப்பெண்களையெல்லாம் தூங்குமாறும் அவர்கள் தூங்கும்போது அவர்கள் அங்கங்கள் எல்லாம் அருவருப்பூட்டும் நிலையில் தெரியுமாறும் செய்தார்கள் (சரிதம் 70).

நள்ளிரவில் யாரும் அறியாமல் காட்டிற்கேகிய இளவரசன் தேரோட்டியிடமிருந்த உடைவாளை வாங்கித் தன் தலையணியை அறுத்துத் துக்கியெறியும் போது அதை விண்ணுலகிலிருந்த தேவர்கள் பிடித்துத் தாங்கள் வணங்குவதற்காக வைத்துக் கொள்கிறார்கள். இளவரசன் தன் உடையை நீக்கி விடவேண்டும் என்று எண்ணியவுடன் விண்ணுலகத்தேவன் ஒருவன் காவி உடையணிந்து மான்வேட்டை ஆடும் வேட்டைக்காரன் உருவத்தில் தோன்ற, அவர்கள் உடை மாற்றிக் கொள்கிறார்கள்.

சித்தார்த்தனுடைய வாழ்க்கையில் தேவர்கள் தலையீடும் துணையும் அளவுக்கதிகமாக இருப்பதாகப் புத்தசரிதம் காட்டுவதால் அவனுடைய துறவின் பெருமை சிதைக்கப்படுகிறது. இது புத்த சரிதத்தின் ஆசிரியரால் அறிந்து செய்யப்படுகிறதா, அறியாமல் செய்யப்படுகிறதா என்பது புரியவில்லை.