பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சித்தார்த்தன் முதியவனையும் நோயுற்றவனையும் பிணத்தையும் கண்டு மாந்தர்களின் மூப்பு, பிணி, இறப்பு ஆகியவற்றிற்கு முடிவு காணவேண்டுமென்று அரண்மனையிலிருந்து காட்டிற்குச் சென்று வெவ்வேறு கோட்பாடுகள் கொண்ட முனிவர்களைச் சந்தித்து அவர்கள் கண்ட வழிகள் சரியில்லையென்று தீர்மானித்து உண்மை வழி எதுவென்று ஆராய முற்படுவதாகவே புத்தசரிதம் கூறும். பிராமணர்கள் பசு, குதிரை போன்ற விலங்குகளைக் கொன்று வேள்விகள் செய்யும் காட்சியோ அது கண்டு அவன் சினம் கொண்டு வேள்வியால் பயனில்லையென்றும் உயிர்க் கொலை பாவமென்றும் அவ்வாறு செய்து விண்ணுலகம் அடையலாம் என்ற அவர்களது நம்பிக்கை தவறானதென்றும் கூறும் காட்சியோ புத்தசரிதத்தில் இடம் பெறவில்லையென்பதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை யென்பதும் கருதற்குரியவை.

தவவனத்தை அடையும் இளவரசர் தவம் மேற்கொண்டுள்ள முனிவர்கள் பலரைப் பார்க்கிறார்; அவர்களோடு உரையாடி அவர்களுடைய நோக்கங்களை அறிகிறார். ஒரு பிராமணன் அத்தவவனத்தில் இருக்கும் முனிவர்களின் வாழ்க்கை பற்றிக்கூறும் விளக்கம் நீண்டதும் ஆய்வுக்குரியதும் ஆகும்.

இங்குள்ள முனிவர்கள் வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி சமையல் செய்யப்படாத உணவையே உட்கொள்வர். நீரில் வளர்வன, இலைகள், நீர், பழங்கள், கிழங்குகள் ஆகியவையே முனிவர்கள் உட்கொள்பவை. சிலர் பறவைகளைப்போல் தரையிலிருந்து பொறுக்கியெடுக்கக் கூடியவற்றை உண்பர்; சிலர் மான்களைப்போல் புல்லை மேய்வர்; மற்றவர் காட்டுக் காற்றினால் புற்றுகளாக மாற்றம் பெற்றுப் பாம்புகளோடு தங்களது பொழுதைக் கழிப்பர் . . . .

நீரில் நனைக்கப்பட்ட சடை முடிகளோடு சிலர் நாளைக்கிருமுறை அக்கினிக்குப் புனித நூல்களால் அவிகளை அளிப்பர்; மற்றவர் நீரில்மூழ்கி மீன்களோடு வாழ்வர்;

உரிய காலத்திற்கு இத்தகைய நோன்புகளைச் செய்து உயரியவற்றால் மோட்சத்தையும் தாழ்ந்தவற்றால் மாந்தர் வாழும் உலகத்தையும் அடைவர். ஏனெனில் ஆனந்தம் என்பது துன்பத்தின் வழியாகத்தான் அடையப் பெறுகிறது; தர்மத்தின் இறுதி நோக்கம் ஆனந்தம் என்று சொல்வார்கள் (சரிதம் 94-95).

இவைகளைக் கேட்ட சித்தார்த்தன் அவர்களுடைய வழி தவறானதென்றும், உடலை வருத்திக் கொள்வதுதான் தர்மம்