பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 149


என்றால் உடலின்பம் தர்மத்திற்கு மாறானதென்றும் தர்மத்தினால் மறு உலகில் இன்பம் அடையலாமென்றால் இவ்வுலகில் தர்மத்தால் கிடைக்கும் பயன் தர்மத்திற்கு எதிரானதென்றும் எண்ணினான்.

தூய்மையான உணவை உண்ணுவதன்மூலம் தான் புண்ணியம் அடையமுடியுமென்றால் மான்களுக்குப் புண்ணியம் சேரவேண்டும். செல்வம் இல்லாததால் எளிய உணவை உட்கொள்வார், தர்மம் பற்றி அறியாதபோதும் புண்ணியம் பெற வேண்டும் . . . தங்களுடைய செயல்களைத் தூய்மையாக்கிக் கொள்ளத் தங்கள் தலைகளில் தண்ணிரைத் தீர்த்தமென்று தெளித்துக் கொள்வார்க்கு அவர்களுடைய மனநிறைவு உணர்வு அளவிலேயே நின்றுவிடும். ஏனெனில் தண்ணிர் ஒரு பாவியைத் தூய்மைப்படுத்த முடியாது (சரிதம் 97).

அவ்வனத்தில் தவம் செய்து வந்தவர்களின் தலைவர் சித்தார்த்தனை அவ்வனத்திலேயே அவர்களோடு தங்கிவிடுமாறு சொன்னபோதும் அவர் “உங்களுடைய தர்மம் மோட்சத்தைக் குறித்தது; என்னுடைய விருப்பம் பிறப்பிலிருந்து விடுதலை பெறுவது” என்று விடையிறுத்து வெளியேறினார் (சரிதம் 101).

காட்டுக்கேகிய சித்தார்த்தனை மீண்டும் நகரத்திற்கு அழைத்து வருவதற்காக அரசனால் அனுப்பப்பட்ட அமைச்சனும் புரோகிதனும் சித்தார்த்தனைச் சந்தித்து நிகழ்த்தும் உரையாடலில் வேள்விகளின் தீமை பற்றிய பேச்சோ, வருணப்பாகுபாடுகள் பற்றிய விவாதமோ இடம்பெறவில்லை. சித்தார்த்தனைத் தங்களோடு ஊர் திரும்ப வேண்டுமென்று சொல்லும் அமைச்சன்,

நீ தருமத்தைக் கடைப்பிடிப்பதற்கு இது தக்கசமயம் ஆகாது. வயதானகாலத்தில் உன்தந்தைக்குத் துயரம் அளிப்பது உன்னுடைய தருமமாக இருக்கமுடியாது. நீ தருமம், செல்வம், காமம் பற்றிப் பெற்றிருக்கும் அறிவு குறையுடையது. உன் கண்களுக்குமுன் இருக்கும் பொருளை இகழ்ந்துவிட்டு யாரும் பார்த்திராத பயன் ஒன்றைத்தேடி அரண்மனையை விட்டு வெளியேறுவது நுட்பமான அறிவைக்காட்டாது. சிலர் மறு பிறவி உண்டென்பர்; வேறு சிலர் இல்லையென்பர். இது ஐயத்திற்கு இடமான கருத்தாதலால் உனக்கு அளிக்கப்பெறும் நாட்டுரிமையை அனுபவிப்பது தான் சரியாகும் . . . சிலர் இறப்பிற்குப்பின் ஒரு வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் விடுதலை பெறுவதற்கான வழிகளை அவர்கள் விளக்கவில்லை.... நன்மை, தீமை, வாழ்க்கை, வாழ்க்கையின்மை ஆகியவையெல்லாம் இயற்கையான வளர்ச்சி என்று சிலர் விளக்குவர். இவ்வுலகம் இயற்கையான வளர்ச்சியின் விளைவென்றால், அல்லது விலங்கு பறவைகளின் வெவ்வேறான தன்மைகளை யார் உருவாக்குகிறார்கள்?