பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 153


வீசுவதாலும் இன்று நீ புத்தனாவது உறுதி,” என்று வருவது உரைக்கிறது. பெருமைக்குரிய, தூய மரத்தடியில் அமர்ந்து “என் பணிமுடியாமல் நான் இவ்விடத்திலிருந்து எழுந்திருக்க மாட்டேன்” என்று அவன் கூறியவுடன் “விண்ணுலகிலிருந்த தேவர்கள் இணையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்; பறவைகளும் காட்டு விலங்குகளும் ஒலி எழுப்புவதை நிறுத்தின; காட்டு மரங்களில் கிளைகள் காற்றால் தாக்கப்பட்டபோதும் சற்றும் அசையவில்லை” (சரிதம் 187).

அரிய முயற்சிக்குப் பின் புத்தர் ஞான ஒளி பெறும் சிறப்பைச் சொல்லும் பதினான்காம் காண்டத்திலும் புத்தநெறிக்கு ஏற்புடையவைதானா என்று நாம் ஐயுறத்தக்க நிகழ்வுகளும் கருத்துகளும் இடம் பெறுகின்றன.

ஆழ்ந்த தியானத்தில் வெற்றி பெறும் புத்தர் முதல் கட்டத்தில் தம்முடைய முன்னைய ஆயிரக்கணக்கான பிறவிகளையெல்லாம் நினைவுகூர்கிறார். அவருடைய உள்ளம் எல்லா உயிர்களின் பாலும் இரக்கத்தால் நிரம்புகிறது. பிறவிச் சுற்று என்பது வாழை மரத்தின் தண்டுபோல் உள்ளீடு அற்றது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. இரண்டாவது கட்டத்தில் உலகம் முழுவதையும் களங்கமற்ற கண்ணாடியில் பார்ப்பதுபோல் அவர் பார்க்க முடிகிறது. எல்லாவுயிர்களும் மறைவுக்குப்பின் அடையும் நிலைகளை அவர் பார்த்து அவற்றின்பால் மேலும் இரக்கம் கொள்கிறார். பாவச் செயல்களைப் புரியும் உயிர்கள் நரகத்தில் மீண்டும் பிறந்து பல துன்பங்களை அடைகின்றன. சிலர் உருக்கி வார்க்கப்பட்ட இரும்பைக் குடிக்கக் கட்டாயப்படுத்தப் பெறுகின்றனர்; சிலர் நெருப்புத் தூணில் கழுவேற்றப்படுகின்றனர்; சிலர் இரும்பு உலைகளில் உணவுபோல் வேக வைக்கப்படுகின்றனர்; சிலர் எரியும் நிலக்கரிக்குவியல்களில் வறுக்கப்படுகின்றனர், சிலர் இரும்புப்பற்கள் கொண்ட நாய்களாலும், பறவைகளாலும் கடித்துக் குதறப்படுகின்றனர் (சரிதம் 204).

உயிர் வாழ்பவையாவும் எப்பொழுதும் உழைக்க வேண்டியிருப்பதையும் பிறப்பு, முதுமை, இறப்பு, மறுபிறப்பு ஆகிய சுழற்சியில் சிக்கித் தவிக்க வேண்டியிருப்பதையும் கண்ட புத்தர் பிறவி எவ்வாறு ஏற்படுகிறது என்று சிந்தனை செய்தார். அவரது தெய்வீகப் பார்வையால் வினையிலிருந்து பிறப்பு ஏற்படுகிறதென்றும் ஒரு படைப்பாளனிடமிருந்தோ, இயற்கையிலிருந்தோ, தன்னிலிருந்தோ ஏற்படவில்லையென்றும், காரணம் ஏதுமின்றிப் பிறப்பு நிகழ்வதில்லையென்றும் கண்டறிந்தார் (சரிதம் 209).