பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


உயிர் வாழ்க்கையின் மூலமும் தொடக்கமும் பற்றிய ஆய்வையும் புத்தர் மேற்கொள்கிறார். வாழ்க்கையின் விதிகள், புலனின்பம், தன்னைப்பற்றிய கருத்துக்கள், தவறான கருத்துக்கள், ஆகியவற்றைக் கைப்பற்றுதலிலிருந்து உயிர் வாழ்க்கையும், வேணவாவிலிருந்து கைப்பற்றுதலும், உணர்ச்சியிலிருந்து வேணவாவும், இணைப்பிலிருந்து உணர்ச்சியும், ஆறு உறுப்புகளின் மூலம் இணைப்பும் பெயர்- உருவத்திலிருந்து உறுப்புகளும், நனவிலிருந்து பெயர்உருவமும் தோன்றுகின்றனவென்றும் பெயர்- உருவத்தின் ஆதரவினால் நனவு தோற்றம் பெறுகிறதென்றும் பெயர் உருவமும், நனவும் ஒன்றுக்கொன்று காரணிகளாய் அமைகின்றன வென்றும் புத்தர் உணர்ந்தார்.

புத்தர் எல்லாம் அறியும் நிலையை அடைந்தவுடன் “நிலமானது மது குடித்த மங்கைபோல் அசைந்தாடியது; சித்தர்களின் கூட்டங்களால் திசைகளெல்லாம் பொலிவுற்றன; வானில் பெரிய முரசங்கள் பேரொலி செய்தன” (சரிதம் 213).

அருள் நிறைந்த உள்ளம் பெற்ற புத்தர் உலகிற்கு அறிவுரை கூறவும் மக்களுக்கு மனஅமைதி தரவும் விழைந்தார். அப்பொழுது விண்ணுலகத் தலைவர்கள் இருவர் (இவர்கள் இந்திரனும் பிரம்மாவும் என்ற கதை பின்னால் உருப்பெற்றது) உலக நன்மையை விரும்பிக் கீழுலகம் வந்து அவரைப் பாராட்டி மாந்தர் யாவரும் பிறவிக் கடலிலிருந்து விடுதலை பெற அவர் உழைக்க வேண்டுமென்றும் உலக நன்மைக்காகப் பாடுபடும் எண்ணங் கொண்டவர் இவ்வுலகிலோ விண்ணுலகிலோ வேறு யாரும் இல்லையென்றும் கூறிச் சென்றனர் (சரிதம் 216).

திசைகள் நான்கிலிருந்தும் தேவர்கள் தோன்றி அவருக்குப் பிச்சைப் பாத்திரங்கள் நான்கைக் கொடுத்தனர். கெளதமர் அவை நான்கையும் ஒன்றாக மாற்றிக்கொண்டார். அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த இரண்டு வணிகர்கள் ஒரு தேவதையின் துண்டுதலால் அவருக்கு வணக்கம் செலுத்தி பிச்சையும் அளித்தனர் (சரிதம் 217).

புத்தர் மாந்தரின் அறியாமையைப்போக்க வேண்டும் என்ற முடிவுடன் பீமரதன் விரும்பும் காசி நகரம் நோக்கிப் பயணமானார் என்று இக்காண்டம் முடிவுறும். பீமரதன் என்பவன் யாரென்பதையும் அறிஞர்கள் முடிவு செய்ய இயலவில்லை. காசி மன்னர்களில் ஒருவனாக இருக்கலாம் என்றும் சிவனாக இருக்கலாமென்றும் ஊகங்களை முன்வைப்பர் (சரிதம் 217).

புத்தசரிதத்தின் சீன, திபெத்திய மொழிபெயர்ப்புகள் என்று நமக்குக் கிடைப்பவற்றிலும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளும்,