பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 155


வித்தைகளும், விண்ணுலகங்களும், தேவர்களும் இடம் பெறக் காணலாம். பதினைந்தாம் காண்டம் ஞானமடைந்த புத்தர் புத்த தன்மத்தைப் போதிக்கத் தொடங்குகிறார் என்றும் அதனைக் கேட்ட நூறு தேவதைகளும் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவனும் உண்மை அறிந்து உய்வுற்றார் என்றும் விளக்கும்.

புத்தரிடமிருந்து முதலில் அறவுரை பெற்றவன் கெளண்டின்யனே.... அதனைக்கேட்ட நிலவுலகில் வாழும் யக்சர்கள் அறச்சக்கரமானது யாவும் உணர்ந்த ஞானியால் எல்லா உயிர்களின் நன்மைக்காகவும் நல்லமுறையில் திருப்பப்பட்டுள்ளது என்று உரத்த குரல்களில் சொன்னார்கள்.... வானிலிருந்த தேவதைகள் அவற்றைக் கேட்டவுடன் அவர்களும் பெருங்குரல் எழுப்பினர். அவ்வொலி ஒரு விண்ணுலகிலிருந்து மற்றொன்றுக்குப் பரவி இறுதியில் பிரம்மாவின் உலகத்தையும் எட்டியது. அவ்வுலகங்களிலிருந்த தன்னடக்கம் உள்ள தேவதைகள் சிலர் மூவுலகமும் நிலையற்றது என்ற கருத்தைக் கேட்ட அளவில் புலன் இன்பங்களை வெறுத்துச் சாந்த நிலை பெற்றார்கள்.... இவ்வாறு அறச்சக்கரமானது மண்ணிலும் விண்ணிலும் சுற்றப் பட்டபோது மேகங்களற்ற வானிலிருந்து பூ மழை பொலிந்தது; மூவுலகங்களிலும் இருந்தவர்கள் வலிய முரசங்களை அதிரச் செய்தனர் (சரிதம் 14).

இத்தகைய வருணனை எல்லாம் சீன மொழிபெயர்ப்பு, திபெத்திய மொழிபெயர்ப்பிலிருந்து சில இடங்களில் மாறுபடுவதையும் எது வடமொழிமூலத்திற்கு உண்மையானது என்று கண்டறிய முடியவில்லை யென்பதையும் ஜான்ஸ்டன் ஆங்காங்கே சுட்டிச் செல்வார்.

அம்ரபாலி எனும் பரத்தைக்குக் கெளதமர் அருள்புரியும் காண்டத்தில் பெண்களைப் பற்றி அவருடைய கருத்துகளென்று சொல்லப் பெறுபவையும் ஆய்வுக்குரியன.

அம்ரபாலி நம்மிடம் வருகிறாள். மனவலி குறைந்த ஆண்களுக்கு அவள் நோயாவாள்; நீங்கள் உங்கள் உள்ளங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு விழிப்புடன் இருங்கள்.

அறிவும் விழிப்புணர்வும் இல்லாத ஆணுக்குப் பெண் என்பவள் அருகில் குடியிருப்பார்க்குப் பாம்பைப் போலும், உருவிய உடைவாள் கொண்ட பகைவனைப் போலும் துன்பம் தரவல்லவள்.

அமர்ந்திருந்தாலும், படுத்திருந்தாலும், நடந்தாலும், நின்றாலும், ஓவியமாக வரையப்பட்டிருந்தாலும் பெண் ஆண்களின் உள்ளங்களைக் கவர்ந்து விடுவாள்.