பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. மருதநாயகம் ✤ 15


“பறையனென்னும் பெயரைப் பரப்புவதற்காகக் காசியம்பதியில் வீரவாகு என்னும் ஒரு தோட்டிப் பறையன் சுடலையில் பிணங்களைச் சுடுவதும் குழி வெட்டியானாகவும், வரும் பிணங்களின் வாய்க்கரிசியும் முழந்துண்டும் வாங்கிக் கொண்டிருந்தானென்றும் கதை எழுதிப் பேதையர்களை ஏமாற்றி வருகின்றார்கள்” (பண்டிதர் | 134) என்பதற்கான ஆதாரங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது. விசுவாமித்திரனும் அரிச்சந்திரனும் சொல்லும் பொய்களை எடுத்துக் காட்டி “இந்துச் சகோதரர்களே! பொய் சொன்னானை மெய் சொன்னான் என்பீரேல் நீங்கள் மெய் சொல்ல வெட்கிப் போய் சொன்னதாகுமே! ஆதலால் அரிச்சந்திரன் பொய் சொன்னான் என்று நீங்கள் மெய் சொல்லி வெளி வாருங்கள். இதுவே நம் தேச தெய்வ முறைமை” (பண்டிதர் | 1142) என்று வேண்டுகோள் விடுக்கிறது. ஊன்றிப் பார்த்தால் சுயமரியாதையற்ற இந்துக்களையும் பறையர்களையும் வெள்ளென வெளுத்திருக்கும் அரிச்சந்திரன் கதையென்பது தெளிவாகும் என்று விளக்கி இக்கட்டுரை “புத்தபிரானுக்குச் சங்க அறரென்றும் சங்க மித்திரரென்றும் சங்க தருமரென்றும் அனந்தம் பெயர்கள் உண்டு. இதில் சங்க அறரென்னும் புத்தரைச் சிந்திக்கும் சங்கத்தோர்களைச் சங்கர சாதிகளென்று வகுத்து இவர்களே சுடலை காப்பவர்களென்று மனு நூலில் எழுதி வைத்திருக்கிறார்கள்; இன்னும் சம்மா, சம் புத்தா என்னும் பெயரைச் சாம்பார், வீர சாம்பவர், சாம்பவனார், சுடலைகாக்கும் வீரசாம்பவத் தோட்டி என்று பலவாறு இழிவு செய்து வருகின்றார்கள்” (பண்டிதர் | 152) என்று ஓரினத்தாரை இழிவு செய்யும் நோக்குடன் தொன்மம் எவ்வாறு கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

இன்னொரு கட்டுரையில் கபிலர் அகவலும் இத்தகைய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பெறுகிறது. கபிலர் அகவல் என்னும் கட்டுக் கதையானது பெளத்தராகிய பறையர்களை இழிவுபடுத்தவும் பிறப்பிலேயே சாதிகள் உண்டு, பூர்வத்திலேயே வேஷ பிராமணர்கள் உண்டு என்று வலியுறுத்தவும் எழுதப் பெற்றது. பாலி மொழியில் உபநயனமென்றும் வடமொழியில் ஞானநேத்திரமென்றும் தமிழ் மொழியில் ஞானக்கண், உள்விழியென்றும் கூறப்பெறுவது புத்த தர்மப்படி ஒருவனுக்கு முப்பதாவது வயதில் அளிக்கப் பெறுவதாகும். கபிலருக்கு ஏழு வயதில் உள்விழி திறக்கச் செய்தார்கள் என்பது கபிலர் அகவலில் கூறப்பட்டுள்ள முதல் பொய். அவர் புத்த தன்மத்தைச் சார்ந்தவராதலால் உலகத்தை ஒருவன் படைத்தான் என்பதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். உலகத்தை நான்முகன் தோற்றுவித்தான் என்று அவர் கூற்றாகத் தந்திருப்பது இரண்டாவது பொய். தான் குறித்துள்ள நாடுகளில் பார்ப்பார்கள் இல்லையென்று