பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 159

எமது குல மரபோரிடத்துச் சிதலுண்டது நீங்கி எஞ்சிய நூற்களாகும் அருங்கலைச் செப்பு, அறநெறிச் சாரம், நிகழ்காலத்திரங்கல், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, சிலப்பதிகாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிகடுகம், திரியறக்கலை செய்யுட்களைக் கொண்டும் சமணமுனிவர்களால் சித்திபெற்றோரும் சித்தர்கள் இயற்றியுள்ள சித்த நூல்களின் ஆதாரங்களைக் கொண்டும் சாக்கைய வமிச வரிசையோர் தங்கள் கர்ண பரம்பரையால் வழங்கி வந்த கருதிகளைக் கொண்டும் சென்னை சாக்கைய புத்தசங்கத்திற்கு வந்திருந்த மாண்டலே, யு. சாந்தவாரா வென்னும் சமண முனிவராலும், ஹோன்னா சிலோன், யு. வினயலங்காரா வென்னும் சமண முனிவராலும் மோல்மென், யு. தேஜோவன் ஸா வென்னும் சமண முனிவராலும், பாலி பாஷையிலுள்ள அபிதம்மத சங்கஹ, பட்தானா, தம்மசங்கினி, சம்ஹிதகத்தா வென்னும் தம்மநூற்களை மொழி பெயர்த்தும் — நாளது வரையில் வெளியிட்டுள்ள சரித்திர நீதிநெறி ஒழுக்கங்கள் யாவையும் புத்தக ரூபமாகத் திரட்டி வெளியிட்டுள்ளோம் (ஆதிவேதம் 1 — 2).

தம்முடைய நூல் வடநூலார் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை, அது “அன்னிய மதத்தார்களால் வரைந்து வைத்துள்ள பெளத்த நூற்களுக்கு மாறுபட்டே நிற்கும். அதாவது பாலி நூற்களிலிருந்து மொழி பெயர்த்ததனால் உண்டாம் பேதங்களும் செய்யுட்களிலிருந்து பொருள் பிரித்த பேதங்களும் இத்தேசத்திற்கு வந்துள்ள யாத்திரைக்காரர் வசம் எழுதியளித்துள்ள பேதங்களும் பேரானந்த புத்த தன்மத்திற்கு மாறுதலடைந்து பல வகையாய சந்தேகத்தில் ஆழ்த்தித்திகைக்க வைத்திருக்கிறது” (ஆதிவேதம் 2) என்று அவர் வெளிப்படையாகத் தெளிவுபடுத்துவார்.

புத்த தன்மத்தை அறியாதவர்கள் பாலியையும் ஆங்கிலத்தையும் கற்றறிந்து செய்துள்ள மொழிபெயர்ப்புகள் நம்பத் தக்கவையல்ல என்பது அவர் முடிவு:

ஞானசாதன ரகசியங்கள் விளங்காது . . . தங்கள் தங்கள் மனம் போனவாறு பன்றி இறைச்சியைத் தின்றாரென்றும் பேதிகண்டு தள்ளாடி நடந்து ஓர் அரச மரத்தடியில் இறந்தாரென்றும் புத்ததன்மத்திற்கு எதிரிடையாய அபுத்த தன்மத்தை மொழி பெயர்த்து வரைந்து வைத்திருக்கின்றார்கள் (ஆதிவேதம் 3).

“புத்தர் காலத்திலேயே வேஷப் பிராமணர்கள் இருந்தார்களென்றும் அப்பிராமணர்கள் பெளத்த மார்க்கத்தில் சேர்ந்ததாகவும் எழுதியிருக்குமாயின் அவைகள் யாவும் மத்தியில் சேர்த்துள்ள பொய் சரித்திரங்களென்றே நீக்க வேண்டும்” (ஆதிவேதம் 7) என்று அவர் கூறும்போது அசுவகோசரின் புத்த சரிதமும் அத்தகைய நூல்களில் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும்.