பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 161


நிகழ்ந்துள்ளன வென்பதையும் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு கற்பனை நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன வென்பதையும் அசுவகோசரின் புத்தசரிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ஜான்ஸ்டன் அதன் வடமொழி மூலம், சீன திபேத்திய மொழிபெயர்ப்புகள் பற்றி ஆங்காங்கே தரும் குறிப்புகளாலும் அறிய முடியும்.

புத்தரே பல சித்து விளையாட்டுக்களைச் செய்து மக்களைக் கவர்வதாகவும் பிராமணர்களையும் அரசர்களையும் தம் நெறிக்கு மாற்றுதற்கு அவர்களிடம் தம் ஆற்றலைக் காட்டச் சித்து வித்தைகளைக் கையாள்வதாவும் அசுவகோசரின் புத்த சரிதம் கூறும். ஆயினும் இது பற்றி அயோத்திதாசர் கொண்டிருந்த கருத்து தெளிவானது.

மனிதனால் செய்யக்கூடிய வித்தைகள் அனந்தமுண்டு. அவ்வித்தைகளால் தருமம் சிறப்படையாது. மனிதனை சீலமும் ஒழுக்கமுமே சிறப்படையச் செய்யும். சித்துக்களை விளையாடியவர்கள் யாவரும் சமணமுனிவருள் சித்தி பெற்றோர்களேயன்றி வேறொருவரும் கிடையா. அவர்களினும் மேலாய சித்து வித்தைகளைக் கையாடினோர் வேறொருவரும் கிடையாதென்பதே திண்ணம். இவ்வித்தைகள் யாவற்றையும் பெளத்தர்கள் வெகுவாக மதிக்க மாட்டார்கள். சீலத்தையும் ஒழுக்கத்தையுமே மேலாக மதிப்பர். மனிதன் அபூர்வமாய சித்துக்களை விளையாடிய போதிலும் அவைகள் யாவுமோர் வித்தையென்றே புத்த பிரானின் பிரதம தமிழ் மாணாக்கர் அகஸ்தியர் இயற்றியுள்ள செய்யுட்களைக் காண்க.

அகஸ்தியர் விவேக தசபாரதம்

கடல் வரவழைக்க, மேருவையனைக்க, கடமுயிர்ப் பெய்யவே செய்ய,

உடல் பிரிந்து அயலோர் உடலதில்பாய, ஊரிலா வெளியில் ஊர்காட்ட,

வடவனல் வளைக்க, அஷ்டநாகங்கள் அனைத்தையும் முன்னிலை அழைத்து,

விட பலகோடி சித்து ஆடிடினும் வித்தை யென்றறிவதே விவேகம்,

கரி பலகோடி வனத்திருந்தழைக்கக் கரடி சிங்கங்களை ஆட்ட,

வரி பலகோடி அழைக்க மேற்கொள்ளவவனியைத் துறந்தறக் காட்ட,

நரி பலகோடி பரியென நடத்தி நஞ்சமுதாக்கியே கொடுக்க,

விரி பலகோடி சித்தை யாடிடினும் வித்தை யென்றறிவதே விவேகம் (அலாய்சியஸ் II 450-51).