பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


எசமானனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பிக்குகளுக்கு அடியவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், அடியவர்களுக்குப் பிக்குகள் போதிக்க வேண்டிய அறவுரைகள் என்னும் தலைப்புகளில் புத்தர் நீண்ட உரையொன்று ஆற்றுவதாக இக்காதை அமைகிறது.

“மத்திம பதிபதா காதை” பேதைமை, செய்கை, உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத்தொகுதி, பிறப்பு ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று உண்டாகின்றன வென்றும் பிறப்பிலிருந்து மூப்பும், மரணமும், வலியும், அழுகையும், துன்பமும், கவலையும் ஏக்கமும் உண்டாகின்றனவென்றும் விளக்கும். “சதுர் பரமார்த்த காதை” மனம், மனத்தின் ஆற்றல், உருவம், நிருவாணம் ஆகிய நான்கு வகைப் பரமார்த்தங்கள் பற்றிப் பேசும். “கன்மகாதை” பேராசையால் செய்யப்படும் கன்மங்கள், பகையால் செய்யப்படும் கன்மங்கள், செறுக்கால் செய்யப்படும் கன்மங்கள், பேராசை யற்றுச் செய்யப்படும் கன்மங்கள், பகையற்றுச் செய்யப்படும் கன்மங்கள், செறுக்கற்றுச் செய்யப்படும் கன்மங்கள் என்று கருமங்களைப் பட்டியலிடும்; ஒருவன் பலபிறவிகளில் தசபாரமிதைகளாம் தானம், சீலம், நிக்கஹமா (பிறர் நலனையே கருதுதல்), பிரஞ்ஞா (ஞானத்தை விருத்தி செய்தல்), வீரியா (துய்மை பெற அச்சமின்றிச் சிந்தித்துத் தெளிதல்), சாந்தி (அன்பு பாராட்டிச் சினம் கொள்ளாதிருத்தல்), சத்யா (சத்தியத்தைக் கைப்பற்றல்), அதிஷ்டானா (நல்வழியிலிருந்து பிறழாமலும் அவாக்களை எழவிடாமலும் இருத்தல்), மைத்ரீ (தாய் தன் ஒரே மகனைக் காப்பாற்றுதல்போல் எல்லாவுயிர்களிடத்தும் கருணை காட்டல்), உபேட்சா (நண்பனையும் பகைவனையும் ஒரே விதமாகப் பாவித்தல்) ஆகியவற்றைத் தன் நடைமுறை வாழ்க்கையில் கைக்கொண்டானானால் அரகத்து நிலையை அடைவான் என்றும் எடுத்துரைக்கும் (ஆதிவேதம் 243).

புக்க சதி துறவு பூண்ட காதை (1) களவு செய்யாமை (2) கள்ளருந்தாமை (3) பொய் சொல்லாமை (4) பிறன் மனை நயவாமை (5) கொலை செய்யாமை (6) அகால உணவு அருந்தாமை (7) இசை, வாசனை, கூத்து ஆகியவைகளுக்கு இடங்கொடாமை (8) உயர்வான படுக்கையின்மேல் துயிலாமை ஆகிய எட்டுச் சீலங்களை வற்புறுத்தும்.

“பிருமன் தரிசன காதை” ஒரு தனித்தன்மை கொண்டது. சங்க இலக்கியம் கூறும் ஐந்நில மக்களின் வாழ்க்கை முறைகளை இக்காதை விளக்கும். புத்தர் பாலைவனம் சென்று அங்குள்ள மக்களுக்குக் கண்ணாடி செய்யும் தொழிலைக் கற்றுத் தருகிறார். குறிஞ்சி நிலம் சேர்ந்து அங்கு வாழும் குறவர்கள் கொலைத் தொழில்