பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 183


முழுக்கவனத்தையும் செலுத்தினார். அவர்களுடைய சமயக் கொள்கைகளில் அவரும் நம்பிக்கை கொண்டிருந்தவராதலால் அவற்றின் குறைகளைப் பேச அவர் முனையவில்லை.

விடுதலைப் போராட்ட வீரர்களைப் பெரிதும் பாராட்டிக் கட்டுரைகள் எழுதிய பாரதியார் சுதேசிய இயக்கத்திலும் இந்து சமயத்தின் பெருமைகளிலும் ஈடுபாடு கொண்டு அவை பற்றி விளக்குவதையே தமது கடமையாகக் கொண்டிருந்ததை நாம் எளிதில் உணர முடியும். அவருடைய சமயம், இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும்கூட அயோத்திதாசர் பெற்றிருந்த அளவு வடமொழி, பாலி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய அறிவு வெளிப்படவில்லை. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் அறிந்தவராயினும் தமிழில் பண்டிதராயினும் சிறு வயதிலேயே பல நூல் பயின்றிருந்தாராயினும் பாரதியின் கல்வியறிவு அயோத்திதாசரின் கல்வியறிவினும் மிகக் குறைந்ததென்பது அவர்களுடைய கட்டுரைகளை ஊன்றிப் படிப்பார்க்குத் தெளிவாகும். தமிழில் அவர் காலத்துக் கிடைத்த எல்லா இலக்கியங்களையும் தாசர் ஆழமாகப் படித்திருந்தார் என்பதில் ஐயமில்லை. பாரதியைப் பற்றியும் அவர் கோட்பாடுகள், நம்பிக்கை பற்றியும் மிகவுயர்வான எண்ணம் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் சிலவுண்மைகள் அவர் கட்டுரைகளில் புதைந்து கிடைக்கின்றன. சான்றாக, இரண்டு மூன்று இடங்களில் சில குற்றம் புரிவாரைச் சாதியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்வார். “பஞ்சம்! பஞ்சம்!” எனும் கட்டுரையில்,

பருத்தி, மணிலாக் கொட்டை முதலிய பிற நாட்டுக்கேற்றுமதியாகும் பொருள்களை அதிகமாக யாருடைய தாட்சணியத்ததிற்காகவேனும் விதைக்காதேயுங்கள். லாபம் காரணமாக விதைத்து அனுப்புகிறவர்களை ஜாதியை விட்டு விலக்கி, அவர்கள் வேலையை நடக்க வொட்டாதபடி செய்துவிடுங்கள். (பாரதியின் கட்டுரைச் செல்வம் 467)

ஒரு சில கருத்துகளை வலியுறுத்த அயோத்திதாசர் அழகிய குட்டிக் கதைகளைச் சொல்கிறார். தன்னலம் மட்டும் கருதுவோன் தான் வயிறு பிழைக்க அரசையும் குடிகளையும் கெடுத்துப் பாழாக்குவது உண்டாதலால் அவ்வகை மிலேச்சர்களை எவ்வரசாட்சியில் கண்டாலும் அவர்களை அங்குத் தங்கவிடாமல் துரத்துவதோடு அவ்வகையார் வித்துக்களுக்கும் பதவிகள் கொடாமலிருப்பதே அரசிற்கு நல்லதாகும் என்பதற்கு நகைச்சுவை மிக்க ஒரு கதை சொல்லப்படுகிறது.

பெளத்தர் காலத்திற்குப் பின்னும் முகமதியர் ஆட்சிக்கு முன்னும் இருந்த ஒரு தமிழரசன் தன் அவையில் தமிழ்