பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


அவர் “சாதிகளில் 1008 சாதி அடுக்கடுக்காய்ப் பிரிவது போல் காங்கிரசும் காலத்திற்குக் காலம் பிரிய வேண்டும்போலும்” என்று தலைப்பிடுகிறார்.

இவ்வருஷத்திய காங்கிரஸ் நாகப்பூரில் ஒன்றும் சென்னையில் ஒன்றும் கூடப் போவதாய் வதந்தி.

அவ்வதந்தி வாஸ்தவமாயின் நாஷனல் காங்கிரசென்னும் பெயரை மாற்றிவிட்டு. நாகப்பூரில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை வங்காளியர் காங்கிரசென்றும் சென்னையில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை பிரமான காங்கிரசென்றும் வைத்துக் கொள்வதே நலம் போலும்.

வங்காளத்தை இரண்டு பிரிவாகக் கர்ஜன் பிரபு விரித்துவிட்டபடியால் இராஜ துவேஷம் ஏற்பட்டதென்று கூறும் கனவான்கள் காங்கிரஸ் கமிட்டி இரண்டு பட்டதற்குக் காரண துவேஷம் யாது கூறுவார்களோ காணவில்லை. நமக்குள்ள ஊழலையும் ஒற்றுமைக் கேட்டையும் சீர்திருத்திக் கொள்ள சக்தியற்ற நாம் இராஜாங்க சீர்திருத்தங்களை எடுத்துப் பேசுவது வீண் கலவைகளேயாம். கணக்கெழுதுவோன் கணக்க சாதி, பணிக்கு செல்வோன் பணிக்க சாதி என்ப பரவுதல் போல் மிதவாதத்துள் மிதவாதமும் அமிதவாதத்துள் அமிதவாதமும் தோன்றும் போலும்.

இத்தகைய இரண்டுபட்ட காங்கிரசின் சென்னை காங்கிரஸ் கூட்டத்துள் சீர்திருத்த வகுப்பாருள் சிலர் பறையர்களைப் பற்றிப் பரிந்து பேசி அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதாக யோசிக்கிறார்களாம்.

இவ்வகைப் பரிந்த பேச்சுகள் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும் பேசக் கண்டுள்ளோமன்றி அனுபவத்தில் அவர்களுக்குள்ள குறைகளை நீக்கியவர்கள் ஒருவருமில்லை.

ஆதலின் நமது காங்கிரஸ் கமிட்டியாரும் உள்சீர்திருத்தச் சங்கத்தோரும் சற்றுச் சீர்தூக்கி தொனித்துப் பறையர்களுக்காய்ப் பரிந்து செய்யும் உபகாரத்தை நிறுத்தி அவர்களுக்குச் செய்து வரும் இடுக்கண்களை மட்டிலும் செய்யாமல் இருக்கச் செய்வீர்களாயின் அவ்வுபகாரமே போதுமாகும் . . .

கிராமங்களிலுள்ள அம்பட்டர்களைச் சவரம் செய்ய விடாமல் தடுத்து ரோமரிஷிகளாக்கிவிடும் இடுக்கண்களைத் தவிர்த்துக் குடும்பிகளாக்கி வையுங்கள் (அலாய்சியஸ் 186-87).

பட்டியல் உத்தியைக் கையாண்டு வாதிடுவதில் வல்லவர் தாசர். “சொல்லத்துலையா சாதிகளில் சுயராட்சியம் யாருக்காம்” என்னும்