பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


அவற்றிற்கு ஆதாரமாம் செட்டி பிரமம் வேறு, ஆச்சாரி பிரமம் வேறு. அவர்கள்பால் நின்று தேற விசாரிக்கும் பறையன் பிரமம் வேறு போலும் (அலாய்சியஸ் 1172).

உபநிடதங்கள் பிரமத்தை விளக்கக் கையாளும் நடையையும் உத்தியையும் தாசர் இங்குக் கையாண்டு நையாண்டி செய்து மூலக்கருத்தை எளிதில் தகர்ப்பது குறிப்பிடத்தக்கது.

தமது தமிழன் பத்திரிகை தாய்நாட்டாருக்குப் பரிந்து பேசாமல் ஆட்சியிலிருக்கும் வெளிநாட்டாருக்குத் துணை போவது எனும் குற்றச்சாட்டுக்கு அயோத்திதாசர் தரும் விடை தெளிவானது.

அந்தோ! நாம் சுதேசிகளைத் தூற்றுவதற்கும் பரதேசிகளைப் போற்றுவதற்கும் வந்தோமில்லை. சகல மக்களின் சுகங்களைக் கருதித் தங்களது நீதியைச் செலுத்துகிறவர்கள் யாரோ அவர்களைப் போற்றியும் ஏற்றியும் கொண்டாடுவோம். இதுவே எமது சத்திய தன்மமாகும்.

அங்ஙனமின்றி சுதேசி சுதேசியெனத் தம்பட்டம் அடித்துக் கொண்டு சுயப்பிரயோசனம் கருதோம். அதாவது தற்காலம் சென்னையில் நிறைவேறி வரும் கோவில் வழக்குகளில் வாதிகளும் சுதேசிகளாயிருக்கிறார்கள். பிரதிவாதிகளும் சுதேசிகளாய் இருக்கிறார்கள். வாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கிறார்கள். பிரதிவாதிகளின் லாயர்களும் சுதேசிகளாய் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி சுதேசக் கோவில் சொத்தை அழியவிடாது சீர்திருத்தக் கூடாதோ அல்லது தாங்களே ஒருவர் முதன்மையாயிருந்து நியாயமானத் தீர்ப்பளிக்கலாகாதோ.

இல்லை. அதன் காரணமோ சுயப்பிரயோசனத்தைக் கருதுவோர் சுதேசிகளென்று ஏற்பட்டுள்ளபடியால் சுதேசிகளுக்குச் சுதேசிகளே நம்பிக்கையற்றுப் பரதேசிகளை அடுத்து நியாயம் கேட்கிறார்கள்.

பரதேசிகளோ தன்சாதி புறசாதி என்னும் சாதியற்றவர்களும் தன்மதம் புறமதம் என்னும் மதமற்றவர்களும் ஆதலின் சகலருக்கும் பொதுவாய் நியாயம் கூறிச் சீர்படுத்தி வருகிறார்கள் (அலாய்சியஸ் 1173-74).

சுதேசிகளென்று தம்மை அழைத்துக் கொள்வார். தம் நலமே கருதி அயலவரிடம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு அவரோடு போரிடுவது போல் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதைப் பலவாறு தாசர் எடுத்துக்காட்டுகிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்களுள் இந்து சமயத் தலைவர்களெனப்பட்டோர் வெளியிட்ட கருத்துகளையெல்லாம் உடனுக்குடன் அலசி ஆராய்ந்து அவற்றுள் எவை ஏற்புடையவை